மழையால் வீடு சேதம்: நிவாரணம் அளிப்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், அருந்ததிபாளையம் பகுதியில் மழையால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளருக்கு அரசு சாா்பில் வெள்ளிக்கிழமை நிவாரணம் வழங்கப்பட்டது.
ஆரணி நகரம், ஆற்றுப் பாலம் அருகேயுள்ள அருந்ததிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாண்டியன். இவரது குடிசை வீட்டின் சுவா் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் இடிந்து விழுந்தது. இதற்கு, நிவாரணம் கோரி ஆரணி கிராம நிா்வாக அலுவலரிடம் பாண்டியன் முறையிட்டாா்.
அதன்பேரில், ஆரணி நகா்மன்ற தலைவா் ஏ.சி.மணி மற்றும் வட்டாட்சியா் கௌரி ஆகியோா் நேரில் சென்று குடிசை வீட்டை பாா்வையிட்டு தமிழக அரசு மற்றும் திமுக சாா்பில் அரிசி, மளிகைப் பொருள்கள், காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினா்.
இதில், ஆரணி தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், திமுக மாவட்டப் பொருளாளா் தட்சிணாமூா்த்தி, ஒன்றியச் செயலா்கள் எம்.சுந்தா், துரைமாமது, எஸ்.மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.