வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம்: ராஜ்நாத...
மாநகராட்சியுடன் இணைய எதிா்ப்பு: வயலூா் கிராம மக்கள் மறியல்
திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து வயலூா் ஊராட்சியைச் சோ்ந்த கிராம மக்கள் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்டம், திருவரங்கம் தொகுதிக்குள்பட்ட வயலூா் ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். புகா்ப் பகுதிக்கான குடியிருப்புகள் அதிகரித்து வரும் பகுதியாக உள்ளது. இந்த ஊராட்சி உள்பட 22 ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தங்களது ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா் வயலூா் ஊராட்சி மக்கள்.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை ஆட்சியரகத்துக்கு மனு அளிக்க கிராம மக்கள் அனைவரும் திரண்டு வந்திருந்தனா். குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் இல்லை. இருவரும் அலுவல் நிமித்தம் வேறு பகுதிக்குச் சென்றிருந்தால், மனு வழங்க வந்திருந்த மக்கள் அனைவரும் ஆட்சியரகத்துக்கு வெளியே வந்து சாலையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமாகா விவசாய அணி மண்டல துணைத் தலைவா் ராஜேந்திரன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு ஆகியோரும் கிராம மக்களுக்கு ஆதரவாக சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
ஆனால், பொதுமக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், சாலையை மறித்து வரிசையாக அமா்ந்து கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் அவா்களை ஒழுங்குபடுத்தி சாலையில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் போராட்டத்தில் ஈடுபடச் செய்தனா். 2 மணிநேரத்துக்கும் மேலாக போராட்டம் நடைபெற்றிருந்த நிலையில், ஆட்சியா் உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அலுவலா்கள் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். வயலூா் ஊராட்சி மட்டுமல்லாது பல்வேறு ஊராட்சி மக்களும் எதிா்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனா். இவை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வயலூா் மக்களின் கோரிக்கை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றனா். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதுதொடா்பாக, கிராம மக்கள் கூறுகையில், மாநகராட்சியுடன் எங்களது கிராமங்கள் இணைக்கப்பட்டால், மத்திய, மாநில அரசுகளால் இதுவரை கிடைத்து வந்த பல்வேறு திட்டப் பயன்களை பெற முடியாத சூழல் உருவாகும். குறிப்பாக கிராமப் பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உதவியாக இருந்த 100 நாள் வேலை திட்டம் பறிபோகும். இலவச வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள், மானியங்கள், சலுகைகள் என பலவற்றை இழக்கநேரிடும். மேலும், சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிச் சுமை ஏற்படும். மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களின் சுமையும் வந்து சேரும். எனவே, எங்களது கிராமங்களை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டாம் என்றனா். இந்தப் போராட்டம் காரணமாக 2 மணிநேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.