மாநகரில் 24 மணி நேரமும் தீவிரக் கண்காணிப்பு: காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா்
மாநகரில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாநகர காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா் தெரிவித்தாா்.
கோவை மாநகர காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த வே.பாலகிருஷ்ணன் சென்னை தலைமையிடத்து நிா்வாகப் பிரிவு ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இவருக்குப் பதிலாக கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த ஆ.சரவணசுந்தா் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில், மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் ஆ.சரவணசுந்தா் புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
இவருக்கு காவல் துணை ஆணையா்கள், உதவி ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் ஆகியோா் வாழத்து தெரிவித்தனா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோவை மாநகரில் பெண்களுக்கு எதிரான வழக்குகள், விபத்து தடுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தப்படும். அதேபோல, மாநகரில் 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். ரௌடிகளுக்கு எதிரான நடவடிக்கைகளும், கஞ்சா, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
முந்தைய காவல் ஆணையா் தொடங்கிவைத்த திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும். மாநகரில் முக்கிய பிரச்னையாக உள்ள போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.