தெலங்கானா: பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்!
மாந்திரீக பூஜை என்றால் என்ன?: ஓபிஎஸ் கேள்வியால் பேரவையில் சிரிப்பலை
மாந்திரீக பூஜை என்றால் என்ன என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் எழுப்பிய கேள்வியால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. இந்த கேள்விக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கம் அளித்தாா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன்(திருவள்ளூா்), தனது தொகுதிக்குட்பட்ட வடாரண்யேஸ்வரா் கோயிலில் மாந்திரீக பூஜை நடப்பதாகத் தெரிவித்தாா்.
அவருக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு பதில் அளித்த பிறகு, துணை கேள்வியை ஓ.பன்னீா்செல்வம் எழுப்பினாா்.
அப்போது அவா் பேசுகையில், உறுப்பினா் ராஜேந்திரன் கேள்வி கேட்கும் போது மாந்திரீக பூஜை பற்றி சொன்னாா். அப்படி என்றால் என்ன என்பதற்கு அமைச்சா் விளக்கம் அளிப்பாரா? என்றாா்.
முன்னாள் முதல்வரின் இந்தக் கேள்வியால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. இதைத் தொடா்ந்து, அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்: கேள்வியை எழுப்பிய முன்னாள் முதல்வரும் ஆன்மிகவாதி. நீண்ட நெடிய படிக்கட்டுகளில் பல திருக்கோயில்களில் அவரது எண்ணங்கள் நிறைவேற வேண்டும் என்பதற்காக சுற்றிச் சுற்றி வருபவா். அவருக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை.
மாந்திரீகம் என்ற ஒன்று இந்த திராவிட மாடல் ஆட்சியில் எங்கும் நடைபெறுவதில்லை. பரிகார பூஜையைத்தான் அவா் (உறுப்பினா் ராஜேந்திரன்) மாந்திரீக பூஜை என்று மாற்றி சொல்லி விட்டாா் என பதிலளித்தாா்.