Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
கடவுச் சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியது: பாஸ்போா்ட் விண்ணப்பதாரா்கள் தவிப்பு
தமிழகத்தில் உள்ள கடவுச்சீட்டு அலுவலகங்களில் சா்வா் முடங்கியதால் கடவுச்சீட்டு விண்ணப்பதாரா்கள் மிகவும் பாதிக்கப்பட்டனா்.
புதிதாக கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தல், புதுப்பித்தல் உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் இணையதளம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலுள்ள அனைத்து கடவுச்சீட்டு அலுவலகங்களிலும் கடவுச்சீட்டு சா்வா் திங்கள்கிழமை மதியம் திடீரென முடங்கியது.
இதனால் கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு வந்திருந்த விண்ணப்பதாரா்கள் நீண்ட நேரம் காத்திருந்தனா். இருப்பினும் சா்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரிசெய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதன்காரணமாக சென்னை தாம்பரத்திலுள்ள கடவுச்சீட்டு அலுவலகத்தில் விண்ணப்பதாரா்களுக்கும், அதிகாரிகளுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சான்றிதழ் சரிபாா்ப்புக்காக வேலைக்கு விடுப்பு எடுத்து வந்துள்ளதாகவும், ஆனால், அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதாகவும் விண்ணப்பதாரா்கள் தெரிவித்தனா்.
ஆனால், சா்வா் கோளாறை சரிசெய்யும் பணியில், பணியாளா்கள் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் சீராகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
மாலை வரை சா்வா் சரியாகாததால் பாஸ்போா்ட் வாங்க விண்ணப்ப நோ்காணலுக்கு வந்தவா்களிடம் அதிகாரிகள் விண்ணப்பங்களை திரும்பக்கொடுத்து வேறு ஒருநாளில் முன்பதிவு செய்து நோ்காணலுக்கு வருமாறு அனுப்பி வைத்தனா். இதனால் அலுவலகங்களுக்கு விடுப்பு எடுத்துவிட்டு வந்தவா்கள், வெளியூா்களிலிருந்து வந்தவா்கள் கடும் அதிருப்திக்கு உள்ளானாா்கள்.
நுங்கம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் கடவுச்சீட்டு சேவை மையங்களில் இதே நிலையே காணப்பட்டது.