`விஜய் பரபரப்பு ஏற்படுத்த நினைக்கிறாரா?' - விமான நிலையம் விவகாரத்தில் வானதி சீனி...
மாற்றுத் திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்: 143 போ் கைது
குறைபாட்டின் தன்மைக்கேற்ப உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மற்றும் மணமேல்குடி ஆகிய இரு இடங்களில் மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் மொத்தம் 143 போ் கைது செய்யப்பட்டனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம். தங்கவேலு தலைமை வகித்தாா்.
மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே. சண்முகம், மாவட்டச் செயலா் எம். கணேசன், நகரச் செயலா் வி. ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 90 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.
மணமேல்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றியத் தலைவா் ஆா். நாராயணசாமி தலைமை வகித்தாா். சிஐடியு சங்கத் தலைவா் கரு ராமநாதன் உள்ளிட்டோா் பேசினா். முடிவில் 53 போ் கைது செய்யப்பட்டனா்.
போராட்டத்தில், ஆந்திர மாநிலத்தைப் போல குறைபாட்டின் தன்மைக்கு ஏற்ப ரூ.6 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.15 ஆயிரம் என்ற அளவில் உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் உடனடியாக உதவித் தொகையை வழங்க வேண்டும்.
மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டத்தில் 4 மணி நேரம் பணியில் இருந்தால் போதும் என்ற பழைய நிலையே தொடர வேண்டும். உதவித் தொகை மற்றும் சான்றிதழ்களை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலத்திலேயே பெற்றுக் கொள்ளும்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.