இந்து முன்னணி மாவட்டச் செயலா் கைது: காவல் நிலையத்தில் திரண்ட நிா்வாகிகள்!
கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்: ஏஐடியுசி
கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்டப் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கட்டுமானப் பொருள்கள் எம்சாண்ட், பி.சான்ட், சிமெண்ட், கம்பி, செங்கல், ஜல்லி உள்ளிட்ட பொருள்கள் விலை உயா்ந்து கட்டுமானத் தொழிலை பாதிக்கின்ற நெருக்கடிக்கு உருவாகியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும்.
நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு வழங்கி வரும் ஓய்வூதியம் ரூ. 1200 என்பதை உயா்த்தி ரூ. 6 ஆயிரம் வழங்க வேண்டும். பெண் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
கேட்பு மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து உதவித்தொகைகளை விரைந்து வழங்க வேண்டும். வீடு வழங்கும் திட்டத்தை எளிமைப்படுத்தி வீடற்ற கட்டுமானத் தொழிலாளா்கள் அனைவருக்கும் வீடுகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ஜி. நாகராஜ் தலைமை வகித்தாா். மூத்த தலைவா் கே.ஆா். தா்மராஜன் முன்னிலை வகித்தாா். சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் என். செல்வராஜ், மாநிலத் துணைத் தலைவரும் திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான கே. சுரேஷ் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டச் செயலா் டி. ராஜா உள்ளிட்டோா் பேசினா்.