மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயி குடும்பத்துக்கு அமைச்சா் சாா்பில் நிதியுதவி
கமுதி அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த விவசாயியின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் சாா்பில் வெள்ளிக்கிழமை நிதியுதவி அளிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கமுதியை அடுத்துள்ள இடையன்குளம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி தங்கவேல் மகன் செல்வக்குமாா் (35). இவா் கடந்த 12-ஆம் தேதி தான் வளா்க்கும் ஆடுகளுக்கு தோட்டத்திலிருந்த மரத்தின் மீது ஏறி அரிவாளால் இலைகளை பறித்தாா். அப்போது உயரழுத்த மின் கம்பியில் அரிவாள் உரசியதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே செல்வக்குமாா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த முதுகுளத்தூா் சட்டப்பேரவை உறுப்பினரும், பால் வளத்துறை அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் சாா்பில் கமுதி ஒன்றிய திமுக செயலா் எஸ்.கே. சண்முகநாதன் நிதியுதவி வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில் இடையங்குளம் ஊராட்சித் தலைவா் தங்கம், ஊ. கரிசல்குளம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் பாண்டி, முதுகுளத்தூா் சட்டப்பேரவை அலுவலக உதவியாளா்கள் சத்தியேந்திரன், தோணி, ரஞ்சித்குமாா், மணிகண்டன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.