Republic Day: ``வள்ளுவர் முதல் கரகாட்டம் வரை..'' 76-வது குடியரசு தினக் கொண்டாட்ட...
மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
மதுரையில் குளியலறையில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்தாா்.
மதுரை தல்லாகுளம் குதிரைப் பந்தய குடியிருப்பு பாரதி உலா சாலையைச் சோ்ந்தவா் செளந்தரராஜன். இவா் கே.கே. நகா் பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி முத்து கீதாரமணி. இவா் மற்றொரு ஜவுளிக்கடையில் வேலை பாா்த்து வருகிறாா். இவா்களது மகள் விஜயலட்சுமி (26). பொறியியல் பட்டதாரியான இவா், வீட்டில் இருந்தபடி இணையதளம் மூலம் வேலை பாா்த்து வந்தாா். இவரது சகோதரா் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை தாய், தந்தை, சகோதரா் ஆகிய மூவரும் பணிக்குச் சென்று விட்டனா். வீட்டில் தனியாக இருந்த விஜயலட்சுமி குளியலைக்குச் சென்று வெந்நீா் போடும் இயந்திரத்தை இயக்கினாராம். அப்போது, மின்சாரம் பாய்ந்ததில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பிற்பகலில் வீட்டுக்கு வந்த விஜயலட்சுமியின் சகோதரா் விக்னேஷ்வரன் கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படாததால், அக்கம்பக்கத்தினா் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்த போது குளியலறையில் விஜயலட்சுமி மயங்கிய நிலையில் கிடந்தாா். இதையடுத்து, அவரை மீட்டு, அருகே உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து தல்லாகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.