மின்மாற்றியை வேறு இடத்துக்கு மாற்ற கோரிக்கை
திட்டச்சேரியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின்மாற்றியை வேறு இடத்துக்கு மாற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட வாணியத் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இப்பகுதியில் வசிக்கும் மக்களின் நலன்கருதி குத்தாலத்தில் உள்ள திட்டச்சேரி துணை மின் நிலையத்திலிருந்து சாலையோரமாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளுக்கு முழுவதும் மின் விநியோகம் வழங்கப்படுகிறது. வாணியத்தெருவில் குறைந்த மின்னழுத்த குறைபாட்டை போக்கும் வகையில் அப்பகுதியில் சாலையோரம் உள்ள மின்மாற்றி மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, இந்த மின்மாற்றியை வேறு இடத்துக்கு மாற்ற சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கை.