பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி
மும்பையில் அடுத்த 3 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்: மஞ்சள் எச்சரிக்கை!
மும்பையில் அடுத்த மூன்று நாள்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
மும்பையில் தற்போது வெப்பநிலை இயல்பை விட ஆறு முதல் ஏழு டிகிரி வரை அதிகமான இருப்பதாகவும், பிப்ரவரி மாதத்தில் மட்டும் 38.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாகவும், இது 5 ஆண்டுகளில் இல்லாதவகையில் அதிகபட்சமாகப் பதிவாகியுள்ளது.
நகரம் முழுவதும் அதிகப்படியான வெப்பநிலையும், பிற்பகலுக்கு மேல் 36 டிகிரிக்கு மேல் நிலவும் வெய்யிலால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மும்பை, தாணே, பல்கர் மற்றும் நவி மும்பை ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு வெய்யில் இயல்பை விட அதிகரிக்கும். மேலும் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
தனியார் வானிலை நிறுவனமான ஸ்கைமெட்டின் கூற்றுப்படி,
மும்பையில் இந்த மாதத்தின் பிற்பகுதியில் வெப்பம் அதிகமாகக் காணப்படும். கடல் காற்று தாமதமாகத் தொடங்குவது மும்பையின் வெப்பநிலை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக, கடல் காற்று நண்பகலில் தொடங்கி, பகல்நேர வெப்பநிலையைச் சீராக்க உதவுகிறது.
இருப்பினும், கடல் காற்று ஒரு மணி நேர தாமதமாவதால், வெப்பநிலை 2-3 டிகிரி வரை அதிகரிக்கக்கூடும். கடந்த சில நாள்களாக, பிற்பகல் நேரங்களில், வடகிழக்கு திசையிலிருந்து வீசும் வெப்பக் காற்று, தாங்க முடியாத அளவுக்கு வெப்பத்தை ஏற்படுத்துகிறது.
செவ்வாய்க்கிழமையான இன்று மும்பையில் வெப்பநிலை 36 டிகிரி, அதற்கு மேல் பதிவாகும். அதிக ஈரப்பதம் அசௌகரியத்தை அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். பிப்ரவரி மாத இறுதி நாள்களில் மும்பை மக்கள் அதிகப்படியான வெப்பத்தை அனுபவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.