An open letter to CM MK Stalin | TVK Vijay Karur Stampede | Vikatan | DMK
``முறையான சிகிச்சை இல்லை, மகள் மரணம்; அமைச்சருக்கு டெடிகேட் செய்கிறேன்'' - டாக்டரை வெட்டிய தந்தை
கேரள தாமரச்சேரி அரசு மருத்துவமனை
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரியைச் சேர்ந்தவர் அனூப். இவரது 9 வயது மகள் அனயா கடந்த ஆகஸ்ட் மாதம் காய்ச்சல் காரணமாக தாமரச்சேரி அரசு தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை சீரியசானதால் கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி மரணமடைந்தார்.
அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் ப்ரைமரி அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் பாதித்து இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் தனது மகளுக்கு மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்காததால்தான் அவர் இறந்தார் என அனூப் கூறிவந்துள்ளார்.
மேலும் மகளின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க வேண்டும் என தாமரச்சேரி தாலுகா மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் கேட்டு வந்துள்ளார்.
அவருக்கு அறிக்கை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே இன்று தாமரச்சேரி அரசு தாலுகா மருத்துவமனைக்குச் சென்ற அனூப் கண்காணிப்பாளர் அறைக்கு சென்றுள்ளார்.

அங்கு இருந்த உதவி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விபின் (36) என்பவரின் தலையில் அரிவாளால் பலமாக வெட்டினார் அனூப்.
டாக்டரை வெட்டும்போது 'என் மகளை நீதானே கொலைசெய்தாய்' எனக்கூறியபடியே வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் விபினை அங்கிருந்தவர்கள் மீட்டனர்.
அவருக்கு அதே மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த தாமரச்சேரி போலீஸார் அனூப்பை கைது செய்தனர். அவர் மருத்துவரை வெட்டுவதற்கு பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர்.
தாமரச்சேரி தாலுகா மருத்துவமனையில் கண்காணிப்பாளரை தாக்கும் நோக்கத்தில் சனூப் சென்றதாகவும், அவர் இல்லாததால் டாக்டர் விபினை வெட்டியதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அனூப் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். மருத்துவ பரிசோதனை முடித்துவிட்டு போலீஸ் பாதுகாப்புடன் வந்த அனூப் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இதை சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜிக்கும், சுகாதாரத்துறைக்கும் டெடிகேட் செய்கிறேன்" என தெரிவித்தார்.
இதுபற்றி கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "தாமரச்சேரி தாலுகா மருத்துவமனையில் மருத்துவர் மீதான தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. இது மனித மனசாட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. தாக்குதல் நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி மருத்துவரை வெட்டிய தந்தையின் செயல் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.