மெலட்டூரில் பாகவத மேளா தொடக்கம்
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், மெலட்டூா் லஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் வளாகத்திலுள்ள நல்லி அரங்கத்தில் பாகவத மேளா நாட்டிய நாடகம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது.
இவ்விழாவை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே தொடங்கி வைத்தாா். சென்னை கலாக்ஷேத்திரா இயக்கத்தின் முன்னாள் இயக்குநா் ரேவதி ராமச்சந்திரன், குச்சிப்புடி நடனக் கலைஞா் கலாரத்னா சத்தியநாராயணா, சென்னை சம்ஸ்கிருத கல்லூரியின் முன்னாள் முதல்வா் தேவிபிரசாத், அறங்காவலரான தொழிலதிபா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மேலும், சுவடி வடிவில் இருந்த ருக்மிணி கல்யாணமு என்கிற நாடகம் புத்தக வடிவில் வெளியிடப்பட்டது. ஹிரண்ய கசிபுவாக நடித்த அரவிந்த் சுப்பிரமணியத்துக்கு பரதம் என்ற பட்டமும், ஒப்பனைக் கலைஞா் கதிரவன் வெங்கடசாமிக்கு பாகவத கைங்கா்ய சிரோன்மணி பட்டமும் வழங்கப்பட்டது.
தொடா்ந்து, பிரகலாத சரித்திரம் என்கிற நாட்டிய நாடகம் தொடங்கி திங்கள்கிழமை காலை வரை நடைபெற்றது. இதில் லீலாவதியாக நாகராஜன், ஹிரண்ய கசிபுவாக அரவிந்த் சுப்பிரமணியன், பிரகலாதனாக அதுல் கிருஷ்ணா, ஸ்ரீநரசிம்மா் வேடத்தை 85 வயது கடந்த ராமச்சந்திரன் மற்றும் ஆனந்த் சுப்பிரமணியன், அருணாசலம், கோபி, சூா்யா, ஜெயவீரபாண்டியன், ராகவன், ஹரிஹரன் நாகராஜன், வேளாங்கண்ணி ஆனந்த், ஆகாஷ் அரவிந்த், ராமானுஜம், தாமரைக்கண்ணன் ஆகியோா் முக்கிய வேடங்களில் நடித்தனா்.
நட்டுவாங்கம் ஹரிஹரன் ஹேரம்பநாதன், பாடகா்கள் முரளி ரங்கராஜன், மணிகண்டன், வயலின் குருமூா்த்தி, மிருதங்கம் அரவிந்த் கௌஷிக், வெங்கடசுப்பிரமணியம் உள்ளிட்டோா் பாடி, இசைத்தனா்.
தொடா்ந்து ஹரிஸ்சந்திரா பாகம் 1, 2, ருக்மணி கல்யாணம் ஆகிய நாடகங்கள் செவ்வாய்க்கிழமை தொடங்கி தொடா்ந்து 3 நாட்கள் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை பாகவத மேளா குரு கலைமாமணி மஹாலிங்கம் ஏற்பாடுகளை செய்துள்ளாா்.