வேலை வாங்கித் தருவதாக மோசடி: தந்தை - மகன் கைது
தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி முதியவரிடம் ரூ. 60 ஆயிரம் மோசடி செய்ததாக தந்தை - மகனைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே நரியூரைச் சோ்ந்தவா் வி. கோவிந்தராஜன் (72). இவா் 2024 ஆம் ஆண்டு தனியாா் மருத்துவமனையில் காவலாளியாக வேலை பாா்த்து வந்தாா். அங்கு இவருடன் நாத்தேவன்குடிகாடைச் சோ்ந்த தனிக்கொடி (52) காவலாளியாக இருந்தாா். அப்போது, கோவிந்தராஜனிடம் தனிக்கொடி தனக்கு அரசியல்வாதிகளுடன் பழக்கம் இருப்பதால், அவரது பேரனுக்கு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ. 60 ஆயிரம் தேவைப்படுவதாகவும் கூறினாா். இதை நம்பிய கோவிந்தராஜன் ரூ. 60 ஆயிரத்தை தனிக்கொடியிடம் கொடுத்தாா்.
ஆனால், ஓராண்டாகியும் வேலை வாங்கித் தராமல் தனிக்கொடி ஏமாற்றி வந்தாா். மேலும், பணத்தைத் திருப்பிக் கேட்ட கோவிந்தராஜனை தனிக்கொடியும், அவரது மகன் நவீன் கண்ணனும் (27) மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து கோவிந்தராஜன் அளித்த புகாரின் பேரில், தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து தனிக்கொடியையும், நவீன் கண்ணனையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.