`பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுறேன்' - INS விக்ராந்த் லொகேஷன் கேட்ட இளைஞர் கைது.. என்ன நடந்தது?
காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துவருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் எல்லையில் பாகிஸ்தானின் தாக்குதலை முறியடிக்க இந்திய ராணுவம் தயார்நிலையிலே உள்ளது.
பாகிஸ்தான் மீதான போர் தீவிரமாக இருந்த சமயத்தில் இந்தியாவின் போர் கப்பலான ஐ.என்.எஸ் விக்ராந்த் எங்கு இருக்கிறது என போனில் விசாரித்த கேரளாவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து கேரளா போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கொச்சியில் உள்ள கடற்படை தலைமை அலுவலக லேண்ட் லைன் தொலைபேசி எண்ணுக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணியளாவில் ஒருவர் போன் செய்தார். தன் பெயர் ராகவன் என்று மாற்றி கூறிய அவர், பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பல் இப்போது எங்கே சென்றுகொண்டிருக்கிறது என அதன் லொகேஷன் குறித்து கேட்டுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த கப்பற்படை அதிகாரி ஒருவர் இதுகுறித்து கொச்சி துறைமுக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கொச்சி கப்பற்படை அலுவலகத்துக்கு போன் செய்த எண்ணுக்கு தொடர்புகொண்டபோது சுவிட் ஆஃப் என வந்தது. இருப்பினும் லொகேசன் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் போனில் பேசிய நபர் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் நடைக்காவு பகுதியைச் சேர்ந்த முஜீப் ரஹ்மான்(38) என தெரியவந்தது. அவர் கோழிக்கோட்டில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டார். பின்னர் கொச்சிக்கு அழைத்துச் சென்று உயர் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது" என்றனர்.

முஜீப் ரஹ்மானுக்கு மன ரீதியான பிரச்னை உள்ளதாகவும், 2021-முதல் அதற்காக சிகிச்சை எடுத்து வருவதாகவும் முஜீப்பின் பெற்றோர் போலீஸிடம் தெரிவித்துள்ளனர். அதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், முஜீப்புக்கு பயங்கவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை எனவும் கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் புட்ட விமலாதித்யா தெரிவித்தார்.
முஜீப்பின் போன் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படும் எனவும், அவர்அது சமூக வலைதள கணக்குகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஜீப் ரஹ்மான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.