Nifty: "Buy & Sell பண்ற Level இது இல்ல, Watch பண்ற Level" | IPS Finance Comment ...
மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபாடு!
விழுப்புரம் : விழுப்புரம் மேல்பாதி கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயில் திறக்கப்பட்டு பட்டியலின மக்கள் இன்று காலை வழிபாடு செய்தனர்.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் அருகிலுள்ள மேல்பாதி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஊரின் மையப்பகுதியிலுள்ள இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது.
இந்தக் கோயிலுக்குள் சென்று பட்டியலின மக்கள் வழிபாடு நடத்துவதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் ஏற்பட்டது. இதன்காரணமாக 2023 ஆம் ஆண்டு கோயிலை பூட்டி வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
இரு தரப்பினருக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட சமரசப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயிலை வழிபாட்டுக்கு திறக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கோயிலில் பட்டியலின மக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட வேண்டும் என்று கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி உத்தரவிட்டார்.
ஆனால், கோயில் திறக்கப்படாமல் இருந்ததால், விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் நீதிமன்றத்தை நாடினார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயிலில் காலை 6 மணி முதல் 7 மணி வரை தரிசனத்துக்கு அனுமதிப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அனைத்து தரப்பினரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும், யாரேனும் பிரச்னை செய்ய முயற்சித்தால் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திரெளபதி அம்மன் கோயில் இன்று காலை திறக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து தரப்பு பக்தர்களும் சாமி தரிசனம் செய்தனர்.