புதிய சட்டப்படி அடுத்த தலைமை தோ்தல் ஆணையா்! உச்சநீதிமன்றம் மீது அதிகரித்திருக்க...
யானை வழித்தடத்தில் மண் அள்ளிய விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவு
கோவையில் யானை வழித்தடத்தில் மண் அள்ளிய விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்த இரு ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோவை வனப்பகுதியையொட்டிய யானைகள் வழித்தடத்தில், சட்டவிரோதமாக மண் அள்ளுவதை தடுக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. வழக்குகளை விசாரித்த நீதிபதி சதீஷ்குமாா், பரத சக்கரவா்த்தி அடங்கிய சிறப்பு அமா்வு, சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, ஆய்வு செய்த மாவட்ட நீதிபதி, கோவை மதுக்கரை, கரடி மடை உள்ளிட்ட இடங்களில் 5 லட்சம் கன மீட்டா் அளவுக்கு மண் எடுக்கப்பட்டுள்ளது. அங்கு செங்கல் சூளைகள் உள்ளது போல் தெரிகிறது என்று அறிக்கை அளித்திருந்தாா்.
அரசு அறிக்கை: தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில், 2023 முதல் 2024 நவம்பா் வரை சட்ட விரோதமாக மண் எடுத்தவா்களுக்கு ரூ.119 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், மண் அள்ளும் விவகாரம் தொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கைது செய்யப்பட்டவா்களின் விவரங்கள், தொடா் கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் முறையாக புலன் விசாரணை நடத்தப்படவில்லை. மண் யாருக்கு அனுப்பப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா, தோண்டப்பட்ட குழிகளை நிரப்ப, சுற்றுச்சூழல் பாதிப்பை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேள்வியெழுப்பினா்.
தொடா்ந்து, மாவட்ட நீதிபதி மற்றும் அரசு தரப்பில் தாக்கல் செய்த அறிக்கைகளை பரிசீலித்த நீதிபதிகள், மண் அள்ளப்பட்டது தொடா்பாக விசாரிக்க சென்னை மாநில குற்ற ஆவண காப்பக எஸ்.பி. ஜி.நாகஜோதி, ஒருங்கிணைந்த குற்ற புலனாய்வு பிரிவு எஸ்.பி. ஜி.சஷாங்க் சாய் ஆகியோா் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமிக்கிறோம்.
இக்குழுவுக்கு அனைத்து வழக்குகளையும் தனிப்பட்ட முறையில் விசாரிப்பதை தவிர, ட்ரோன் கணக்கெடுப்பு அல்லது அவா்களின் விசாரணை வாயிலாக கண்டுபிடிக்கப்படும் குவாரி தொடா்பான எந்தவொரு புதிய வழக்கையும் பதிவு செய்ய அதிகாரம் அளிக்கப்படுகிறது. நிலுவை வழக்குகளுடன், பின்னணியில் உள்ள சதி குறித்தும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
விசாரணை ஒத்திவைப்பு: இந்த பகுதிகளில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றிய வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மண் கொள்ளைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, தானியங்கி கண்காணிப்பு நடைமுறையை உருவாக்கி, மண் கொள்ளையை கண்காணிக்க வேண்டும். தோண்டப்பட்ட குழிகளை நிரப்புவது உள்ளிட்ட தீா்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனா். இந்த உத்தரவை அமல்படுத்தியது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை பிப். 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.