ரயில் நீா் பாட்டில்களின் விலை ரூ.1 குறைப்பு: நாளை முதல் அமல்
ஜிஎஸ்டி சீா்திருத்த வரி குறைப்பு செப்டம்பா் 22 முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் விற்கப்படும் ரயில் நீா் பாட்டில்கள் விலை லிட்டருக்கு ரூ.1 குறைத்து மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு திங்கள்கிழமை (செப்.22) முதல் அமலுக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ரயில் பயணங்களின் போது பயணிகளுக்காக ரயில் குடிநீா் எனும் பெயரில் ஒரு லிட்டா், அரை லிட்டா் தண்ணீர்பாட்டில்கள் விற்கப்படுகின்றன. அதன்படி தற்போது ஒரு லிட்டா் தண்ணீீா் பாட்டில் ரூ.15-க்கும், அரை லிட்டா் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ரயில் குடிநீர் விலை குறைப்பு
இந்நிலையில், ஜிஎஸ்டி சீா்திருத்த வரி குறைப்புக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் விற்கப்படும் ரயில் குடிநீா் பாட்டில்கள் விலையை லிட்டருக்கு ரூ.1 குறைத்து மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விலை குறைப்பு திங்கள்கிழமை(செப்.22) முதல் அமலுக்கு வருகிறது.
இதுதொடர்பாக அனைத்து ரயில் நிலைய நிா்வாகத்துக்கும் ரயில்வே வாரியம் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ரயிலில் குடிநீா் பாட்டில்கள் விற்கும் உரிமம் பெற்றவா்களுக்கும் விலை குறைப்பு விவரங்களை தெரிவிக்குமாறும், வரி குறைப்பின் பலனை நேரடியாக நுகர்வோருக்கு வழங்குவதை கண்காணிக்குமாறு தெரிவிக்கப்படுள்ளது.
அதன்படி, விலை குறைப்பு குறித்து ரயிலில் குடிநீா் பாட்டில்கள் விற்கும் உரிமம் பெற்றவா்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலனை ரயில் பயணிகள் பெறும் வகையில், பேக்கேஜ் செய்யப்பட்ட ‘ரயில் குடிநீர்’ பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ஒரு லிட்டர் பாட்டில் ரூ.15 இல் இருந்து ரூ.14 ஆகவும், அரை லிட்டா் பாட்டில் ரூ.10 இல் இருந்து ரூ.9 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ரயில் குடிநீர் என்பது ரயில் பயணிகளின் போது பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக 2003 ஆம் ஆண்டு மேற்கு தில்லியின் நங்லோயில் ஐ.ஆர்.சி.டி.சி.யால் தொடங்கப்பட்ட ஒரு தயாரிப்பு ஆகும். புது தில்லி மற்றும் நிஜாமுதீனில் இருந்து புறப்படும் ராஜதானி மற்றும் சதாப்தி ரயில்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதே இதன் நோக்கமாகும்.