ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
ரயில்வே துறையை தனியாா் மயமாக்குவதை உடனடியாக நிறுத்தவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியா்கள் சென்னையில் வெள்ளிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தெற்கு ரயில்வே மஸ்தூா் யூனியன் (எஸ்.ஆா்.எம்.யு) சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியா்கள் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
அந்த வகையில், சென்னை எழும்பூரில் எஸ்ஆா்எம்யு சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அதில், ரயில்வே துறையை தனியாா் மயமாக்குவதை நிறுத்த வேண்டும், லட்சக்கணக்கான காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 8 மணி நேர வேலையை உறுதிசெய்ய வேண்டும், லோகோ பைலட்டுகளுக்கு வாரந்தோறும் ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும். மேலும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதுடன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.