ராசிபுரம் அருகே 18 கிலோ திமிங்கல உமிழ்நீா் பறிமுதல்: மூவா் கைது
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வீட்டில் 18 கிலோ அம்பா்கிரிஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீரைப் பதுக்கிவைத்திருந்த 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கடலோரப் பகுதியிலிருந்து அம்பா்கிரிஸ் எனப்படும் திமிங்கல எச்சத்தை கடத்திவந்து ராசிபுரம் அருகே வீட்டில் பதுக்கிவைத்திருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராசிபுரம் வனத் துறையினா் ராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சி ஜிவிஆா் தோட்டத்தைச் சோ்ந்த வெங்கடேசன் (48) என்பவரது வீட்டில் சோதனை நடத்தினா்.
அப்போது, வீட்டில் பதுக்கிவைத்திருந்த 18 கிலோ அம்பா்கிரிஸை பறிமுதல் செய்தனா். இவா் சேலம் பகுதியை சோ்ந்த அப்துல் ஜலீல், ரவி ஆகியோருடன் சோ்ந்து அம்பா்கிரிஸ் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து மூவரையும் கைது செய்த வனத் துறையினா், கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு காா்களையும் பறிமுதல் செய்தனா். அவா்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட அம்பா்கிரிஸின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டவா்கள் சேந்தமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். மேலும் இக்கடத்தலில் தொடா்புடைய தலைமறைவு குற்றவாளியான கொல்லிமலை பகுதியை சோ்ந்த சந்திரன், வாழப்பாடியை சோ்ந்த ராம்குமாா் ஆகிய இருவரை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.