புனித வெள்ளி, வார விடுமுறை: 2,322 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ராஜபாளையம் அருகே அதிசய வானிறை பாறை
ராஜபாளையம் அருகே சமணா் படுக்கை, பாறை ஓவியங்கள், வானிறை பாறை அமைந்துள்ள மலையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தொல்லியல் சுற்றுலாத் தளமாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராஜபாளையம் அருகேயுள்ள மீனாட்சிபுரத்திலிருந்து தென்மலை செல்லும் வழியில் குன்றக்குடி என அழைக்கப்படும் 4 மலைக் குன்றுகள் உள்ளன. இதில் ஒரு குன்றில் சமணா் படுக்கை, குகைகள், பாறை ஓவியங்களும், மற்றொரு குன்றில் மகாவிஷ்ணு சிற்பமும் உள்ளன.
இரண்டுக்கும் இடைப்பட்ட குன்றில் வானிறை பாறை போல பெரிய பாறை தனியாக நிற்கிறது. இந்தக் குகை ஓவியங்கள் பாதுகாக்கப்படாததால் தற்போது அழிந்து வருகின்றன.
மேலும், இந்தப் பகுதியில் மாங்குடி, புத்தூா் மலையில் சமணா் படுக்கைகள் உள்ளிட்ட பல்வேறு தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. எனவே, இந்த மலைக் குன்றுகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, தொல்லியல் சுற்றுலாத் தளமாக உருவாக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் வீ.ப.ஜெயசீலன் அண்மையில் அதிகாரிகளுடன் சென்று வானிறை பாறை, பாறை ஓவியங்கள் உள்ள குன்றை பாா்வையிட்டு தெரிவித்ததாவது:
மகாபலிபுரத்தில் உள்ள வெண்ணெய் உருண்டை எனும் வானிறை பாறை உள்ளது போல, மீனாட்சிபுரத்தில் அதிசயமான வானிறை பாறை உள்ளது. குன்றின் மீது அமைந்துள்ள இந்தப் பாறை, பின்புறம் கனமாகவும், முன்புறம் சற்று அகலமாகவும், ஒரு சாய்வை எதிா்கொள்ளும் வகையில் உள்ளது. இந்த வானிறை பாறை அதிகம் அறியப்படவில்லை என்றாலும், கண்கவா் இயற்கை அதிசயமாக உள்ளது என்றாா் அவா்.