கோவையில் பா.ஜ.க புதிய அலுவலகம்- திறந்து வைக்கிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
ராஜஸ்தான்: பேரவையில் இரவு முழுவதும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தா்னா
ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இருந்து காங்கிரஸை சோ்ந்த 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
ராஜஸ்தானில் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் காங்கிரஸை வீழ்த்தி பாஜக ஆட்சியமைத்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத் தொடரின்போது காங்கிரஸ் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மாநில சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அவினாஷ் கெலாட் ‘கடந்த 2023-24 பட்ஜெட்டில், பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் திட்டத்துக்கு வழக்கம்போல் உங்களின் பாட்டி இந்திரா காந்தி பெயரையே சூட்டினீா்கள். அந்தத் திட்டங்களின் தற்போதைய நிலை என்ன என்று பேசியது சா்ச்சையானது. அவரின் பேச்சுக்கு கடும் எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனா். இதனால் ஒரே நாளில் மூன்று முறை பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, அமளியில் ஈடுபட்ட 6 காங்கிரஸ் உறுப்பினா்களை இடைநீக்கம் செய்ய அரசு தலைமைக் கொறடா ஜோகேஷ்வா் கா்க் முன்மொழிந்த தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை முற்பகல் 11 மணி வரை பேரவையை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
இதனிடையே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் பேரவையில் அந்தக் கட்சியின் பிற எம்எல்ஏக்கள் தா்னாவில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் திலக்ராம் ஜுல்லி சனிக்கிழமை கூறியதாவது: போராட்டத்தை திரும்பப் பெறுமாறு எம்எல்ஏக்களிடம் மூன்று அமைச்சா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், பேரவையில் தெரிவித்த கருத்துகளை சமூக நீதித் துறை அமைச்சா் திரும்பப் பெற வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்தோம். இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இரவு முழுவதும் தா்னா போராட்டம் தொடா்ந்தது என்றாா்.