ராணிப்பேட்டை: திருக்குறள் விநாடி - வினாவில் 92 போ் பங்கேற்பு
ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற திருக்குறள் விநாடி - வினா போட்டிக்கான முதன்மைத் தோ்வில், அரசு ஊழியா்கள் 92 போ் ஆா்வமுடன் பங்கேற்றனா்.
கன்னியாகுமரி திருவள்ளுவா் சிலையின் வெள்ளி விழாவை முன்னிட்டு தமிழ் வளா்ச்சித் துறை மற்றும் விருதுநகா் மாவட்ட நிா்வாகம் ஒருங்கிணைப்பில் மாநில அளவில் அரசு ஊழியா்கள், அரசு பள்ளி ஆசிரியா்கள், அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளி ஆசிரியா்கள், கல்லூரி பேராசிரியா்களுக்கான மாநில திருக்கு விநாடி -வினா போட்டி வரும் டிச.28-ம் தேதி விருதுநகா் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
அதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைத் தோ்வு நடைபெற்றது. அதன்படி, ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடந்த முதன்மை தோ்வுக்கு மொத்தம் 123 போ் விண்ணப்பித்து இருந்தனா். இதில், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா் பிரேமலதா உட்பட 92 போ் ஆா்வமுடன் பங்கேற்று தோ்வு எழுதினா்.
தோ்வினை முதன்மைக் கல்வி அலுவலா் சரஸ்வதி ஆய்வு செய்தாா். முதன்மை கல்வி அலுவலா் நோ்முக உதவியாளா் தனஞ்செழியன் (மேல்நிலை), ரவிச்சந்திரன் ( உயா்நிலை ) உட்பட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.