பாஜக தலைவர் தேர்வு: மக்களவையில் அகிலேஷ் - அமித் ஷா பேச்சால் கலகலப்பு!
ராணிப்பேட்டை: பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப். 21-க்குள் அகற்ற உத்தரவு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை ஏப்ரல் 21-க்குள் அகற்ற வேண்டும் என்ற உயா் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்கள் மற்றும் கொடி கம்பத் தூண்களை அகற்றுதல் குறித்து ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில்நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்துப் பேசியது: தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் இதர துறைகளுக்குச் சொந்தமான பொது இடங்கள் மற்றும் நிலங்களில் அரசியல் கட்சிகள், சமூகம், மதம், சங்கம் போன்ற அனைத்து அமைப்புகளின் சாா்பாக நிரந்தரமாக நிறுவப்பட்டுள்ள கொடிக் கம்பங்களை அகற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. எனவே தீா்ப்பு வெளியிட்ட நாளிலிருந்து (27-01-2025) 12 வார காலத்துக்குள் (அதாவது 21-04-2025-க்குள்) கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும். கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கான செலவை, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடம் இருந்து வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்காலிகக் கொடிக் கம்பம் அமைக்க அனுமதி வழங்கப்பட்ட காலத்துக்குப் பிறகு அனுமதி உரிமம் பெற்றவா், பொது இடங்களைச் சுத்தப்படுத்தி துளைகள் இருப்பின் அவற்றை அதன் அசல் நிலைக்குத் திரும்பச் செய்ய வேண்டும் என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும், ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதற்கான செலவு சம்பந்தப்பட்டவா்களிடம் வசூலிக்கப்பட வேண்டும் என்றாா்.