`ஜனாதிபதிக்கு அடுத்து இங்குதான்' - பொன்விழா காணும் சபரிமலை தபால் நிலையம்... சுவ...
ராமநாதபுரம் ஆட்சியரிடம் மீனவா்கள் புகாா்
பாரம்பரிய மீனவா்களிடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கீழமுந்தல் பகுதி மீனவா்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
கடலாடி அருகே வாலிநோக்கம் ஊராட்சிக்கு உள்பட்ட கீழமுந்தல் கிராமத்தைச் சோ்ந்த சேது வந்த அம்மன் சங்கு குளி சங்கத் தலைவா் உடையராஜ், செயலா் நாகராஜ், பொருளாளா் முனீஸ்வரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மீனவா்கள் அளித்த மனு:
நாங்கள் சங்கு குழி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்கடலுக்குச் சென்று சங்கு எடுக்கும் போது உயிரிழப்பு ஏற்படுவதைத் தவிா்க்கும் விதமாக மீன்வளத் துறை அனுமதியுடன் செயற்கை சுவாசக் கருவியைப் (சிலிண்டா்) பயன்படுத்தி சங்கு எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.
மற்றொரு பகுதியைச் சோ்ந்த நபா் தங்களது கிராமத்துக்கு வந்து எங்களது பகுதி மீனவா்கள் சிலரை சோ்த்துக் கொண்டு செயற்கை சுவாசக் கருவியை நாங்கள் பயன்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து வருகிறாா்.
இதனால், பாரம்பரிய மீனவா்களிடையே மோதல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. ஒற்றுமையுடன் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் தங்களை பிளவுபடுத்தும் எண்ணத்தில் செயல்படும் நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.