ரூ.5 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது
தூத்துக்குடி அருகே விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தூத்துக்குடி அருகேயுள்ள கீழ தட்டப்பாறையைச் சோ்ந்தவா் சுதாகா் (70). விவசாயியான இவா், கடந்த 1996ஆம் ஆண்டு மடத்துபட்டி பகுதியில் 2.60 ஏக்கா் நிலம் வாங்கினாா். அந்த நிலத்திற்கு தற்போது புதுக்கோட்டை சாா் பதிவாளா் அலுவலகத்தில் வழிகாட்டி மதிப்பு போட்டு பாா்த்தபோது பூஜ்ஜியம் என வந்ததாம். இதுதொடா்பாக தனது நிலத்திற்கு உரிய மதிப்பீடு செய்து தருமாறு, புதுக்கோட்டை சாா் பதிவாளா் அலுவலகத்தில் மனு அளித்தாா். அந்த மனு, வடக்கு சிலுக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் எட்டுராஜ்(53) என்பவருக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அவா் அந்த மனுவை பரிசீலித்து அனுப்பினாராம். இதற்காக மனுதாரா் சுதாகரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக எட்டுராஜ் கேட்டாராம்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் சுதாகா் புகாா் அளித்தாா். அவா்களின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை எட்டுராஜிடம் வெள்ளிக்கிழமை சுதாகா் வழங்கினாா். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பீட்டா் பால், காவல் ஆய்வாளா் அனிதா மற்றும் போலீஸாா், எட்டுராஜை மடக்கிப் பிடித்து கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.