ரூ. 63,000 கோடியில் 26 ரஃபேல் விமானங்கள்: மத்திய அரசு ஒப்புதல்!
இந்திய கடற்படைக்காக 26 ரஃபேல் போா் விமானங்களை பிரான்ஸ் அரசிடம் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவைக் குழு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாத இறுதியில், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபாஸ்டியன் லெகோர்னு இந்தியா வருகை தரவுள்ளார், அப்போது இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, இந்திய விமானப்படையின் அம்பாலா மற்றும் ஹஷிமாராவில் உள்ள தளங்களில் 36 ரஃபேல் ஜெட் விமானங்களை இயக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், தற்போது கொள்முதல் செய்யப்படவுள்ள 26 ரஃபேல் கடற்படை போர் விமானங்கள் இந்திய கடற்படைக்கு வழங்கப்படவுள்ளன. முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐஎன்எஸ் விக்ராந்த் போா்க் கப்பலில் இருந்து 26 விமானங்களும் இயக்கப்படவுள்ளன.
தற்போது ஐஎன்எஸ் விக்ராந்த்தில் இயக்கப்பட்டு வரும் மிக்-29கே ரக போர் விமானங்கள், தொடர்ந்து ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவில் இருந்து இயக்கப்படவுள்ளன.
மொத்தம் ரூ. 63,000 கோடி மதிப்பில் 22 ஒற்றை இருக்கை ரஃபேல் கடற்படை விமானங்கள் மற்றும் 4 இரண்டு இருக்கை ரஃபேல் கடற்படை விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இதில், 10 விமானங்கள் நடுவானில் எரிபொருளை நிரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்படவுள்ளன.
ஒப்பந்தம் செய்யப்பட்ட தேதியில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் இந்தியாவிடம் 26 விமானங்களும் ஒப்படைக்கப்படும்.