பாஜக ஆட்சியில் தலித்துகள், பெண்களுக்கு பாதுகாப்பில்லை: ராகுல் காந்தி
பாஜக ஆட்சியில் தலித்துகள் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத 11 வயது தலித் சிறுமி செவ்வாயன்று (ஏப். 15) காணாமல் போனார்,
மறுநாள் காலை ஒரு வயலில் கண்டுபிடிக்கப்பட்ட அவரது உடலின் அந்தரங்கப் பகுதிகளில் இரத்தப்போக்கு காணப்பட்டது. மேலும் கடித்த அடையாளங்கள் அவர் உடலில் காணப்பட்டன இதனைத் தொடர்ந்து, கவலைக்கிடமான நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்தச் சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் காவல்துறையினர் 24 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பாஜக அரசைக் கண்டித்து ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “உத்தரபிரதேச மாநிலத்தின் ராம்பூரில் 11 வயது தலித் சிறுமிக்கு நடந்த கொடுமை மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது வெட்கக்கேடான சம்பவம்.
உ.பி.யில் தொடர்ந்து இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவது பாஜக ஆட்சியின் கீழ் தலித்துகள், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதைத் தெளிவுப்படுத்துகிறது.
இதில், பாதிக்கப்பட்டவர்கள் உதவியற்றவர்களாகவும், குற்றவாளிகள் சட்டம் ஒழுங்கு பற்றி கவலைப்படாதவர்களாகவும் இருக்கின்றனர். இது பாஜகவின் தலித் மற்றும் பெண்கள் விரோத மனநிலையை எடுத்துக்காட்டுகிறது. இன்னும் எத்தனை காலத்திற்கு உ.பி.யின் மகள்கள் இதுபோன்ற கொடூரங்களுக்கு பலியாவார்கள்?
இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு விரைவில் நீதி வழங்க வேண்டும். இதுவே அரசு நிர்வாகத்திடம் வைக்கப்படும் கோரிக்கை” என பதிவிட்டுள்ளார்.