31 வருடங்களுக்குப் பிறகு தூசுதட்டப்பட்ட வழக்கு; 32 வயது இளைஞன் 63 வயதில் AI மூலம...
வக்ஃப் சட்டம்: திட்டமிட்டபடி நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம்! - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திட்டமிட்டபடி தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு, வக்ஃப் திருத்தச் சட்டம் என்ற பெயரில் வக்ஃப் அமைப்பையே சீர்குலைக்கும் வகையில் சட்டம் இயற்றி, தனக்குள்ள எதேச்சாதிகார பலத்தைக் கொண்டு சட்டமாக்கி, நாட்டில் அமலாக்கம் என்று அறிவித்துப் பெருமைப்பட்டுக் கொண்டது.
நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக அமைப்புகளும் இதற்கு நாடு முழுவதிலும் எதிர்ப்பைத் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள், தர்ணாக்கள், கூட்டங்கள் நடத்தி வந்தனர்.
அத்தோடு இந்த சட்டத்தை அமலாக்கக் கூடாது என்று அறிவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அனைத்து ஜனநாயக அரசியல் அமைப்புகளும் வழக்கு தொடுத்தன.
நேற்று 16-4-2025 மதியம் 2 மணிக்கு துவங்கிய விசாரணை 17-4-2025 மதியம் 2 மணி அளவில் நிறைவு பெற்றது. வக்ஃப் திருத்தச் சட்டம் எனும் பெயரில் புதிதாக அறிவித்திருக்கும் அனைத்து மாற்றங்களும் நடைமுறைக்கு உகந்தது அல்ல என்று அறிவித்து நேற்று வரை தொடர்ந்த வக்ஃப் சட்ட மரபுகள் தொடரும் என உச்ச நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு செய்திருக்கிறது. நாடு முழுவதிலும் உச்ச நீதிமன்றத்தின் இந்த அதிரடி அறிவிப்புக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
வக்ஃப் திருத்தச் சட்டம் அறிமுக நிலையிலேயே இந்த கருப்புச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதன்முதலில் தீர்மானம் நிறைவேற்றி தனது எதிர்ப்பை தெரிவித்த முதலமைச்சர் மு.க .ஸ்டாலினுக்கு இந்தியாவில் வாழும் 25 கோடி முஸ்லீம் சமுதாயமும், ஜனநாயக சக்திகள் அனைத்தும் நன்றியும் வாழ்த்தும் கூற கடமைப்பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வரும்போது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்பட்டுள்ளது, குடிமக்களின் மதச்சார்பான உரிமைகள் என்றும்போல் பாதுகாப்பாக உள்ளன, இந்தியா எனும் இந்த மாபெரிய நாடு உலகிற்கு வேற்றுமையில் ஒற்றுமையை பறைசாற்றிக் கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்படும்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்திய அனைத்து கட்சியினருக்கும் நன்றியும், வாழ்த்தும் உரித்தாக்குகிறோம்.
அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், ஜமாத்துல் உலமாயே ஹிந்த், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, கேரள சமஸ்த ஜமிஅத்துல் உலமா மற்றும் அனைத்து அமைப்புகளும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கின்றன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கினர் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தி தங்களின் எதிர்ப்பை தெளிவாக தெரிவித்து இருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதிலும் ஏப்ரல் 18 ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டக் கூட்டங்கள் திட்டமிட்டபடி தொடர்ந்து நடத்தப்படும் என்றும், வக்ஃப் சட்ட விளக்கமும், உச்ச நீதிமன்றம் இடைக்கால நிவாரணமாக அறிவித்திருப்பதை வரவேற்றும், மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு மேற்கொண்டு வரும் முஸ்லீம் சமுதாய விரோதப் போக்கை கண்டித்தும் உரைகள் நிகழும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தொடரப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று தொடங்கியது. இன்றும் வழக்கின் விசாரணை நடைபெற்றது.
அதில், புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் ஆகியவற்றில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று இந்து வாரியங்களில் இஸ்லாமியர்களை சேர்ப்பீர்களா? என உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.