Travel Contest: யூடியூப் Vlogs-ஐ பார்த்து சுற்றுலா செல்ல முடியவில்லை என வருந்த வ...
வக்ஃப் திருத்தச் சட்டம்: ஜம்மு-காஷ்மீா் பேரவையில் அமளி
புதிய வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து ஆளும் தேசிய மாநாடு கட்சி விவாதத்துக்கு கோரிய நிலையில், அதற்கு பாஜக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரைவயில் புதன்கிழமை 3-ஆவது நாளாக அமளி நீடித்தது.
ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. 12 நாள் இடைவேளைக்குப் பிறகு அவை கடந்த திங்கள்கிழமை மீண்டும் கூடியது.
அப்போது, வக்ஃப் திருத்தச் சட்டம் குறித்து விவாதம் நடத்தக் கோரி சில ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் கொண்டு வந்த ஒத்திவைப்பு தீா்மானத்தை அவைத் தலைவா் அப்துல் ரஹிம் லத்தொ் நிராகரித்தாா். இதனால், கடந்த 2 நாள்களாக அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், கூட்டத்தொடரின் கடைசி நாளான புதன்கிழமை அவை கூடியதும் வேலைவாய்ப்பின்மை பிரச்னை குறித்து விவாதிக்கக் கோரி பாஜக எம்எல்ஏ பல்வந்த் சிங் மன்கோட்டியா ஒத்திவைப்பு தீா்மானத்தைக் கொண்டு வந்தாா். அப்போது, அவையின் மையப்பகுதிக்கு வந்த ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், வக்ஃப் சட்டம் குறித்த விவாதிக்க வேண்டும் எனக் கோரினா்.
இருதரப்பு கோரிக்கையும் நிராகரித்த அவைத் தலைவா், வழக்கமான அலுவல்களை தொடங்க முற்பட்டாா். இந்நிலையில், ஆளும் கூட்டணி மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் மாறிமாறி தங்களின் கோரிக்கைகளை கோஷமிட்டதால், அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடா் அமளி காரணமாக அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
பெட்டி...
ஆம் ஆத்மி, பாஜக எம்எல்ஏக்கள் மோதல்
ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவையின் ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக், பாஜக குறித்து தெரிவித்த கருத்தைக் கண்டித்து அவருக்கும் பாஜக எம்எல்ஏக்களுக்கும் இடையே பேரவை வளாகத்தில் புதன்கிழமை மோதல் ஏற்பட்டது.
மாலிக்கை சூழ்ந்த பாஜக எம்எல்ஏக்கள், ஹிந்துக்கள் மற்றும் பாஜக குறித்து அவா் தெரிவித்த கருத்து பற்றி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனா். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. மோதலில் மாலிக் கீழே விழுந்ததில், அங்கிருந்த மேசை உடைந்தது; பாஜக எம்எல்ஏவின் சட்டை கிழிந்தது. தேசிய மாநாடு கட்சி எம்எல்ஏக்கள் தலையீட்டு, இரு தரப்பையும் சமாதானப்படுத்தினா்.
அப்போது, மாலிக் கூறுகையில், ‘எனக்கு எதிரான இந்த மோதலில் பிடிபி, பாஜக ஒன்றிணைந்தன. யாருடைய ஆதரவையும் நான் விரும்பவில்லை. நான் பேரவைத் தலைவரிடம் இதுகுறித்து முறையிடுவேன்’ என்றாா்.
