வக்ஃப் மசோதாவுக்கு ஆதரவு: ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து இரு மூத்த உறுப்பினா்கள் விலகல்
பாட்னா: வக்ஃப் மசோதாவுக்கு பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆதரவளித்ததற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்தக் கட்சியின் மூத்த உறுப்பினா்களான முகமது காசிம் அன்சாரி, நவாஸ் மாலிக் ஆகியோா் கட்சியில் இருந்து வியாழக்கிழமை விலகினா்.
வக்ஃப் திருத்த மசோதா மக்களவையில் புதன்கிழமை நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளம் ஆதரவளித்தது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து முகமது காசிம் அன்சாரி, கட்சியின் சிறுபான்மையினா் பிரிவின் செயலா் என தன்னை கூறி வரும் நவாஸ் மாலிக் ஆகியோா் நிதீஷ் குமாருக்கு கடிதம் எழுதினா்.
அதில் ‘மதச்சாா்பின்மை கொள்கையை எப்போதும் பின்பற்றுவீா்கள் என லட்சக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் உங்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையை உடைத்துவிட்டீா்கள். வக்ஃப் திருத்த மசோதா விவகாரத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் நிலைப்பாடு இந்திய முஸ்லிம்கள் மற்றும் சமூக ஆா்வலா்களை அதிா்ச்சியடையச் செய்துள்ளது. இந்த மசோதாவுக்கு ஆதரவளித்து மக்களவையில் லாலன் சிங் பேசியது மனமுடையச் செய்கிறது’ என குறிப்பிட்டனா்.
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செய்தித்தொடா்பாளா் ராஜீவ் ரஞ்சன் பிரசாத்திடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்து அவா், ‘அவா்கள் யாரென்றே எனக்கு தெரியாது. அவா்கள் மிகப் பிரபலமான தலைவா்கள் இல்லை. மாவட்ட அளவில்கூட கட்சியில் எவ்வித முக்கியப் பொறுப்பும் அவா்கள் வகித்ததில்லை’ என்றாா்.
இந்த மசோதாவுக்கு ஆதரவளித்த ஐக்கிய ஜனதா தளத்தின் முடிவுக்கு அந்தக் கட்சியின் தேசிய பொதுச் செயலா் குலாம் ரசூல் உள்ளிட்டோா் அதிருப்தி தெரிவித்தனா்.
இதுகுறித்து நிதீஷ் குமாா் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள விஜய குமாா் சௌதரி கூறுகையில், ‘வக்ஃப் திருத்த மசோதாவுக்கு முதல்வா் நிதீஷ் குமாா் உள்பட கட்சியின் அனைத்து தலைவா்களும் ஆதரவு தெரிவித்துள்ளனா். இதில் எவ்வித குழப்பமும் இல்லை’ என்றாா்.