உதவித்தொகையுடன் மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தொழிற்பயிற்சி!
வடக்கு மாசிடோனியாவில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 50 பேர் பலி!
ஐரோப்பிய தேசமான வடக்கு மாசிடோனியாவில் செயல்பட்டு வந்த இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேற்கண்ட விடுதி கட்டடத்தில் பற்றிய தீ, கொளுந்துவிட்டு எரிந்ததால் கட்டடம் முற்றிலும் சேதமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இரவு நேர கேளிக்கை விடுதிக்கு விடுமுறை நாளையொட்டி நள்ளிரவு நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகமானோர் வருகை தந்திருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், கருகிய நிலையில் உள்ள பல உடல்களை அடையாளம் காணும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் வடக்கு மாசிடோனியா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.