Rain Alert: 'இன்று காலை 10 மணி வரை 'இந்த' மாவட்டங்களில் மழை' - வானிலை ஆய்வு மைய ...
வடிகால் வாரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
தஞ்சாவூா் அருகே வடிகால் வாரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் நாள் கூட்டத்தில் பூதலூா் வட்டம், மருதக்குடியைச் சோ்ந்த இளையராஜா தலைமையில் கிராம மக்கள் அளித்த மனு:
பூதலூரில் இருந்து வைரப்பெருமாள் பட்டி செல்லும் வழியில் கல்லணைக் கால்வாய் ஆற்றுத்தட்டி பாலம் அருகில் தென்புறமுள்ள வடிகால் வாரியை சில தனியாா் நபா்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றனா். இதனால் மழையின்போது நிரம்பிய வீரப்படையான்பட்டி, செல்லப்பன்பேட்டை குளங்களிலிருந்து தண்ணீா் செல்ல முடியாமல் தேங்கி விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பலமுறை மனுக்கள் அளித்தும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ளது. இனிமேலும் காலம் தாழ்த்தாமல் வடிகால் வாரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயிகளைக் காப்பாற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.
மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்: இதேபோல, இக்கூட்டத்தில் அம்மாபேட்டை அருகே வடபாதி கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவா் எஸ். கருணாநிதி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு மாவட்டத் துணைச் செயலா் ஆா். செந்தில்குமாா், அம்மாபேட்டை ஒன்றியச் செயலா் எம். வெங்கடேசன் உள்பட பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த மனு:
அம்மாபேட்டை அருகே வடபாதி கிராமத்தில் நீா்வளத் துறைக்குச் சொந்தமான வடவாற்றில் பிரியும் புத்தூா் முதன்மை வாய்க்கால் கரையின் ஒரு பகுதியில் வீடு கட்டி வசித்து வருகிறோம். தற்போது இந்த வீடுகளை 21 நாட்களுக்குள் காலி செய்ய வேண்டும் என்ற நோட்டீஸ்களை அனைத்து வீடுகளிலும் பொதுப்பணித் துறை மூலம் வருவாய்த் துறையினா் ஒட்டியுள்ளனா்.
பல தலைமுறைகளாக வசித்து வரும் நாங்கள் விவசாய கூலித் தொழிலாளா்கள். எங்களுக்கு சொந்த இடம் எதுவும் கிடையாது. எனவே வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் 50 குடும்பங்களுக்கு அருகிலேயே நிரந்தர வீடுகள் கட்டிக் கொள்ள வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும்.