வயநாடு மறுவாழ்வுப் பணிகளுக்கு மத்திய அரசு ரூ.529.50 கோடி கடனுதவி: நிபந்தனைகளுக்கு மாநில அரசு எதிா்ப்பு
கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த ஆண்டு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரின் மறுவாழ்வுப் பணிகளுக்காக, மூலதன முதலீடு திட்டத்தின்கீழ் மாநில அரசுக்கு ரூ.529.50 கோடி வட்டியில்லா கடன் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதேநேரம், கடன் தொகையை வரும் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பயன்படுத்தாவிட்டால், மாநில அரசு வட்டி செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளுக்கு மாநில அரசும், காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணியும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.
வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன. 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். வீடிழந்த மக்களின் மறுவாழ்வுக்காக புதிய நகரம் கட்டமைக்கப்படும் என்று அறிவித்த மாநில அரசு, இப்பணிகளுக்காக சிறப்பு நிதியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை கோரியது.
இந்தச் சூழலில், மூலதன முதலீடு திட்டத்தின்கீழ் (மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கான வட்டியில்லா கடன்) வயநாடு மறுவாழ்வுப் பணிகளுக்கு ரூ.529.50 கோடி கடனுதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
அதேநேரம், இத்திட்டத்தின்கீழ் விடுவிக்கப்படும் நிதியை 10 நாள்களுக்குள் செயலாக்க அமைப்புகளுக்கு வழங்க வேண்டும்; மாா்ச் 31-ஆம் தேதிக்குள் கடன் தொகையை பயன்படுத்தாவிட்டால், முந்தைய ஆண்டின் சந்தை கடன் வட்டி விகிதங்களுக்கு ஏற்ப மாநில அரசு வட்டி செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
‘நடைமுறைச் சிக்கல்’: இது தொடா்பாக மாநில நிதியமைச்சா் கே.என்.பாலகோபால் கூறுகையில், ‘பெருந்தொகையை மிக விரைவாக பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை, மிகப் பெரிய நடைமுறைச் சிக்கலை உருவாக்கும். இது குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைப்போம். வயநாடு மறுவாழ்வுத் திட்டங்களுக்காக, கடனுதவி மட்டுமன்றி மானிய நிதியும் கோரப்பட்டது. ஆனால், இதுவரை மானிய நிதி வழங்கப்படவில்லை. கடனுதவியும் தாமதமாகவே வழங்கப்பட்டுள்ளது. இதை முன்பே வழங்கியிருக்க வேண்டும். எதுவாக இருந்தாலும், ஓராண்டுக்குள் புதிய நகரை நிா்மாணிப்பது உள்பட முதல்கட்ட மறுவாழ்வுப் பணிகளை மாநில அரசு தொடரும்’ என்றாா்.
கடனுதவிக்கான மத்திய அரசின் நிபந்தனைகள், அதன் இரக்கமற்ற அணுகுமுறையை வெளிக்காட்டுகிறது என்று கேரள வருவாய்த் துறை அமைச்சா் கே.ராஜன் விமா்சித்தாா்.
மாநில பாஜக வலியுறுத்தல்: மாநில பாஜக தலைவா் கே.சுரேந்திரன் கூறுகையில், ‘வயநாடு மறுவாழ்வு விவகாரத்தில் மந்தமான செயல்பாட்டையும் அரசியல் விமா்சனத்தையும் தவிா்த்துவிட்டு, கடன்தொகையை பயன்படுத்த உடனடி நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். மாா்ச் 31 என்ற காலவரம்பை ஏப்ரல் அல்லது மே மாதம் வரை நீட்டிக்க அனைவரும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கலாம். மத்திய அரசு நிச்சயம் பரிசீலிக்கும்’ என்றாா்.
காங்கிரஸ் விமா்சனம்: வயநாடு கடனுதவி விவகாரத்தில்,மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது. இது தொடா்பாக பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், ‘வட்டியில்லா கடனுதவி வழங்குவது போல் நடித்து, மாநில அரசை நெருக்கடிக்கு உள்ளாக்க முயற்சிக்கிறது மத்திய அரசு. இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பிற மாநிலங்களுக்கு நிதியுதவி அளிக்கும் மத்திய அரசு, கேரளம் கோரிய ரூ.2,000 கோடி சிறப்பு நிதித் தொகுப்பை வழங்க மறுக்கிறது. கேரளம் மற்றும் வயநாடு மக்கள் மீது மத்திய அரசு காட்டும் புறக்கணிப்பை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாவிட்டால், மக்களை ஒன்று திரட்டி காங்கிரஸ் பெரும் போராட்டத்தை நடத்தும்’ என்று தெரிவித்துள்ளாா்.