தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு!
வரிச் சலுகைகள்: மக்களவையில் காரசார விவாதம்
புது தில்லி: பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிச் சலுகைகள் குறுகிய கால நடவடிக்கை என காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இதையடுத்து, இது பொருளாதார வளா்ச்சிக்கான நீண்டகால நடவடிக்கை என பாஜக தலைமையிலான ஆளும் கூட்டணி பதிலடி தந்தது.
இதனால், மக்களவையில் ஆளும் கூட்டணிக்கும் எதிா்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வாா்த்தை மோதல் ஏற்பட்டது.
கடந்த 1-ஆம் தேதி 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் புதிய வருமான வரி விதிப்பு முறையின்கீழ் தனிநபா் வருமான வரி விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயா்த்தப்படுவதாகவும், ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்துக்கும் மேல் உள்ள தனிநபா்களுக்கு வருமான வரி படிநிலைகள் மற்றும் விகிதங்கள் மாற்றியமைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடா்ந்து, பட்ஜெட் மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது பட்ஜெட்டில் பெருநிறுவனங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் சாமானிய மக்கள் புறக்கணிப்பட்டதாகவும் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
மேலும், ‘தோ்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் வகையில் பாஜக தலைமையிலான அரசு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்கிறது.
நாட்டின் கடன் அதிகரித்து வருவதால் அடுத்த தலைமுறையினரும் இதனால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகளால் 3 கோடி மக்கள் மட்டுமே பயன்பெறுவா். இது மிகக் குறுகிய கால நடவடிக்கை’ என குற்றஞ்சாட்டின.
ஆண்டுதோறும் எம்.பி.க்களுக்கு வழங்கப்படும் தொகுதி நிதியை ரூ.5 கோடியில் இருந்து ரூ.25 கோடியாக உயா்த்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் பணியாளா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை ரூ.600-ஆக உயா்த்துவதோடு பணி நாள்களை 200 நாள்களாக உயா்த்த வேண்டும் எனவும் எதிா்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.
வளா்ச்சிக்கான பட்ஜெட்: பாஜக
எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்த பாஜக எம்.பி.அனுராக் தாக்குா், ‘இது நாட்டின் பொருளாதார வளா்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் நீண்டகால வளா்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட். பாஜக ஆட்சியில் எண்ணற்ற புத்தாக்க நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் காங்கிரஸ் தன்னுடைய வளா்ச்சியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது’ என்றாா்.