விஜய் படம் பாணியில் அரசு பேருந்து இருக்கையில் வைக்கப்பட்ட அரிவாள்; பொள்ளாச்சியில் அதிர்ச்சி!
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகரின் மையப் பகுதியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் எதிர் எதிரே இயங்கி வருகின்றன. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பொள்ளாச்சி கிராமப் பகுதிகள், வால்பாறை மற்றும் கேரளாவுக்கு பேருந்துகள் செல்லும்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2022-12/57ae817b-0b0f-49e4-9f55-4e30be045ba5/WhatsApp_Image_2022_12_23_at_17_10_06.jpeg)
இதேபோல புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், மதுரை உள்ளிட்ட வெளியூர் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயங்கி வருகின்றன. பொள்ளாச்சி பேருந்து நிலையங்களில் இருந்து சராசரியாக ஒவ்வொரு நாளும் 300-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதன் காரணமாகவும் பொள்ளாச்சி சிடிசி மேடு பகுதியில் ரூ. 8 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பொதுவாக கூட்டம் அதிகமாக இருக்கும்போது பேருந்துகளில் இடம் பிடிப்பதற்கு கைக்குட்டை அல்லது பை வைப்பார்கள். இந்நிலையில் நடிகர் விஜய் நடித்த ‘வேலாயுதம்’ படத்தில் அவர் அரிவாள் மூலம் ரயிலில் இடம் பிடித்திருப்பார்.
அதேபோல பொள்ளாச்சி அரசுப் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக ஒருவர், இருக்கையில் இரண்டு அரிவாள்களை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 5C என்ற எண் கொண்ட உள்ளூர் பேருந்தில் இடம் பிடிப்பதற்காக அரிவாள் வைத்துள்ளனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-11/9xf5mxxw/20250211_080019.jpg)
இதனால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து பொள்ளாச்சி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாள்களுக்கு முன்பு பொள்ளாச்சி பேருந்தில் ஒருவர் கஞ்சா கடத்தி, கையும் களவுமாக சிக்கியது குறிப்பிடத்தக்கது.