சென்னை: பாஜக பிரமுகர் மீது இளம்பெண் பாலியல் புகார்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி
சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர், சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.
அதில், ``நான் தற்போது ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். நான் பிளஸ் டூ படிக்கும்போது என்னுடன் படித்த தமிழரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்தோம். என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறிய தமிழரசன், அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி என்னுடன் செக்ஸ் வைத்துக் கொண்டார். பின்னர் என்னிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாகப் பணம், பரிசுப் பொருளைத் தமிழரசன் பெற்றார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-07/253052e2-c2d1-4394-b2c1-a584df478fab/கைது.jpeg)
அதோடு அவரின் சகோதரியின் திருமணத்துக்காகப் பத்து லட்சம் ரூபாயைக் கடனாகவும் 17 சவரன் தங்க நகைகளையும் வாங்கினார். அதன்பிறகு என்னை ஏமாற்றிவிட்டார். எனவே தமிழரசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் சேலையூர் போலீஸார், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து தமிழரசனிடம் விசாரித்தனர். விசாரணைக்குப்பிறகு அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதுகுறித்து சேலையூர் அனைத்து மகளிர் போலீஸார் கூறுகையில், ``கைதான தமிழரசன், சட்டம் படித்து வருகிறார். இவர் பா.ஜ.க-வில் செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்திருக்கிறார். தமிழரசன் மீது புகாரளித்த இளம்பெண், சில ஆதாரங்களை எங்களிடம் கொடுத்தார். அதன் அடிப்படையில் தமிழரசனிடம் விசாரித்தோம். அவரின் சமூகவலைத்தளப் பக்கங்களை ஆய்வு செய்த போது மேலும் தமிழரசனுக்குச் சில பெண்களுடன் பழக்கம் இருப்பது தெரியவந்திருக்கிறது. எங்களிடம் புகாரளித்த இளம்பெண்ணைக் காதலிப்பதாகக் கூறிய தமிழரசன், அவரோடு சந்தோஷமாக இருந்திருக்கிறார். அதை அந்தப் பெண்ணுக்கே தெரியாமல் வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கிறார். தமிழரசனின் லேப்டாப், செல்போனை பறிமுதல் செய்து சைபர் க்ரைம் பிரிவினரிடம் ஆய்வுக்காக ஒப்படைத்திருக்கிறோம். தமிழசரனின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம்" என்றனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2020-12/99049086-0e51-44e8-8df1-c11ad6a93fe4/violent_3405549_960_720.webp)
போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``எங்களிடம் புகாரளித்த இளம்பெண், தமிழரசனை நம்பி பணம், நகைகளைக் கொடுத்திருக்கிறார். அந்த இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று தமிழரசன், தன்னுடைய குடும்பத்தினரை அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார். அதனால்தான் அந்த இளம்பெண்ணும் தமிழரசனை முழுமையாக நம்பியிருக்கிறார். எதேச்சையாகத் தமிழரசனின் சமூகவலைத்தளப் பக்கத்தை அந்தப் பெண் பார்த்தபோதுதான் அவரின் சுயரூபம் தெரியவந்திருக்கிறது. அதுகுறித்து இளம்பெண், தமிழரசனிடம் கேட்டதற்கு நீயும் நானும் தனிமையிலிருந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டியதாக விசாரணையின்போது அந்தப் பெண் எங்களிடம் தெரிவித்தார். தமிழரசனிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், லேப்டாப் ஆகியவற்றை ஆய்வு செய்த பிறகுதான் முழு விவரங்களைச் சொல்ல முடியும்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs