வேதங்களின்படி அம்பேத்கா் பிராமணா்! நடிகா் கருத்தால் சா்ச்சை!
திருப்பதி லட்டு விவகாரம்: போலி ஆவணம், போலி நெய்... 4 பேர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
ஆந்திர மாநிலத்தில், கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு லட்டு தயாரிப்புக்காக கொள்முதல் செய்த நெய்யில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. அறங்காவலர் குழு திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் உள்பட 5 நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2024-12-29/0hvj9qy3/q18.jpg)
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து முதல்வரான சந்திரபாபு நாயுடு, லட்டு விவகாரத்தை விசாரிக்கும்படி உத்தரவிட்டார். அதன்படி, குஜராத்தில் உள்ள என்டிடிபி பரிசோதனை மையத்துக்கு 2024 ஜூலையில் தேவஸ்தானத்துக்கு வாங்கப்பட்ட நெய் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனையில் அந்த நெய்யில் கலப்படம் இருப்பது தெரியவந்தது.
நெய்யில் மீன் எண்ணெய், மாடு மற்றும் பன்றியின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து, பழைய நெய் ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு தேவஸ்தானத்தில் இதுதொடர்பாக நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து, தேவஸ்தானத்துக்கு நெய் வழங்கிய நிறுவனங்களில் மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர். குறிப்பாக திருப்பதி லட்டு பிரசாத தயாரிப்புக்காக நெய் அனுப்பிய திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் என்ற பால் நிறுவனத்தில் கடந்த செப்டம்பரில் தொடர்ந்து 7 மணி நேரத்துக்கு மேலாக மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திண்டுக்கல் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும் சோதனை நடத்தினர். மேலும் அவர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை மாதிரியை ஆய்வுக்காக எடுத்துச்சென்றனர்.
திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் 5 ஆண்டுகளாக நெய் அனுப்பியுள்ளது. அந்த நெய்யில் 20 சதவீதம் மட்டுமே தரம் இருக்கிறது. அதில் சோயா பீன்ஸில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட பொருள்கள் கலப்படம் செய்யப்பட்டிருக்கிறது ஆய்வு முடிவுகள் வெளிவந்தன. மேலும் இதை உறுதிப்படுத்தும் வகையில், தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கையையும் தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டது.
இதற்கிடையே தங்கள் நிறுவனம் அனுப்பிய நெய்யில் கலப்படம் இல்லை என ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனம் மறுத்திருந்தது. நாங்கள் அனுப்பியது 0.1 சதவீதம் கூட கிடையாது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுப்பும் முன்பும், நெய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தர ரீதியாக எங்களிடம் சரியான ஆதாரம் உள்ளது எனக் கூறியிருந்தனர்.
இதற்கிடையே திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் ஆந்திரா அரசு அமைத்த விசாரணை குழுவுக்கு பதிலாக சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. அதன்படி சிபிஐ அதிகாரிகள், உணவுத் தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்ளிட்டோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/5pdvbg0i/WhatsApp-Image-2025-02-10-at-10.51.05dbbef17d.jpg)
இந்த சிறப்பு புலனாய்வுக்குழு விசாரித்து வந்த நிலையில், திண்டுக்கல் தனியார் டெய்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜசேகரன், உத்தராகண்ட் மாநிலம் ரூர்கியில் உள்ள போலே பாபா டெய்ரி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள் பிபின் ஜெயின், பொம்மில் ஜெயின், வைஷ்ணவி டெய்ரி நிறுவனத்தின் சிஇஓ வினய் காந்த் சவுடா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/ny6cnmig/WhatsApp-Image-2025-02-10-at-10.51.0598b0fd8d.jpg)
சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை வளையத்தில் இருந்த நால்வரும் அதிகாரிகளின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை, எனினும் தேவஸ்தானத்துக்கு நெய் வழங்குவதற்காக போலி ஆவணங்கள் கொடுத்து ஒப்பந்தம் பெறப்பட்டிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.