ஊட்டி: கடமானை வேட்டையாடி, உப்புக் கண்டம் போட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..! என்ன நடந்தது?
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் கடமானை வேட்டையாடி அதன் இறைச்சியை பதப்படுத்த உப்புக் கண்டம் போட்டு வருவதாக வனத்துறையினருக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் வனத்துறையினர் சோதனை மேற்கொண்டு வந்துள்ளனர். கூக்கல்தொரை அருகில் உள்ள பாறையில் கடமான் இறைச்சியை காய வைத்து பதப்படுத்திக் கொண்டிருந்த சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் குமார், குமார் இருண்டு பழங்குடி இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/kqw4iul7/IMG_20250209_WA0001.jpg)
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பிரகாஷ் என்ற இளைஞருக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டறிந்து அவரையும் கைது செய்துள்ளனர். மூன்று பேர் மீதும் வனவிலங்கு வேட்டை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையிலும் மூங்கில் கம்புகள் மற்றும் ரப்பர் பைப் மூலம் வனத்துறையினர் கண்மூடித்தனமாக தங்களை தாக்கியதாக நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இதைக் கேட்ட நீதிமன்றம், அவர்களை சிறைக்கு அனுப்பும் முடிவை மாற்றி ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், "சத்தியமங்கலம் பகுதியில் இருந்து கூலி வேலைக்காக வந்து நீலகிரியில் தங்கியிருந்த மூன்று பேரும் சுருக்கு வலை மூலம் கடமானை வேட்டையாடியுள்ளனர். அவர்களிடம் இருந்த இறைச்சி மற்றும் வேட்டையாட பயன்படுத்திய பொருள்களை பறிமுதல் செய்தோம். முறையாக விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது " என முடித்துக் கொண்டனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/4bxxpgyb/Screenshot20250210090300Gallery.jpg)
கைதானவர்கள் தரப்பினர் கூறுகையில், "மூன்று பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னரே வனத்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கியிருக்கிறார்கள். இது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும்" என வலியுறுத்தி வருகின்றனர்.