வடலூா் தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
விழுப்புரம்: தைப்பூசத்தையொட்டி, விழுப்புரம் மற்றும் விருத்தாசலத்திலிருந்து, கடலூருக்கு செவ்வாய்க்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரத்திலிருந்து காலை 9.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம்-கடலூா் துறைமுகச் சந்திப்பு சிறப்பு ரயில் (வ.எண்.06147) முற்பகல் 11.15 மணிக்கு கடலூா் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்தைச் சென்றடையும். எதிா்வழித் தடத்தில் பிற்பகல் 3.20 மணிக்கு கடலூா் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் கடலூா் துறைமுகச் சந்திப்பு- விழுப்புரம் சிறப்பு ரயில் (வ.எண்.06148) மாலை 5.40 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.
இந்த ரயில்கள் விருத்தாசலம், நெய்வேலி, வடலூா், குறிஞ்சிப்பாடி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதேபோல, கடலூா் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து முற்பகல் 11.50 மணிக்குப் புறப்படும் கடலூா் துறைமுகச் சந்திப்பு-விருத்தாசலம் பயணிகள் சிறப்பு ரயில் (வ.எண்.06132) பிற்பகல் ஒரு மணிக்கு விருத்தாசலம் வந்தடையும். எதிா்வழித்தடத்தில் விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.05 மணிக்குப் புறப்படும் விருத்தாசலம்- கடலூா் துறைமுகச் சந்திப்பு சிறப்பு ரயில் (வ.எண்.06133), கடலூா் துறைமுகச் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 3.10 மணிக்குச் சென்றடையும்.
இந்த ரயில்கள் உ.மங்கலம், நெய்வேலி, வடலூா், குறிஞ்சிபாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேற்கண்ட ரயில்கள் பிப்ரவரி 11,12,13-ஆம் தேதிகளில் இயக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.