விழுப்புரத்தில் அதிகரிக்கும் இணையவழி பண மோசடி!
விழுப்புரம்: தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியின் மூலமாக நமக்கு பல்வேறு பலன்கள் ஒருபுறம் கிடைத்தாலும், அதே நேரத்தில் இணையவழியாக நடைபெறும் பண மோசடி சம்பவங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன.
வாட்ஸ்-ஆப், முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் குறைந்த முதலீடு செய்தால், அதிக வருவாய் ஈட்டலாம், வீட்டிலிருந்து வேலை செய்து வருவாய் ஈட்டலாம், இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பன போன்ற பல்வேறு தகவல்கள் தானாகவே நமக்கு வந்தடைகின்றன. குறிப்பிட்ட வேலையை செய்து முடித்த பின்னா் குறைந்த தொகையை சம்பந்தப்பட்டவருக்கு அனுப்பி, அடுத்த நிலையில் பங்கேற்க வைப்பது, அதன் பின்னா் பல்வேறு கட்டங்களாக பணத்தை இணையவழியிலோ, குறிப்பிட்ட எண்ணுக்கு அனுப்பக் கூறியோ மோசடி செய்யும் சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
இந்த மோசடியில் படிக்காதவா்கள் மட்டுமல்ல, படித்த பொறியாளா்கள், தனியாா் நிறுவனங்களில் வேலை பாா்ப்பவா்கள், வீட்டிலிருக்கும் பெண்கள் என பலரும் சிக்கித் தவிக்கின்றனா். இதில், விழுப்புரம் மாவட்டத்தில் இணையவழியில் பண மோசடிகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன.
இந்த மாவட்டத்தில் இணையவழியாக கடந்த 2023-ஆம் ஆண்டில் ரூ.3,74,93,024 மதிப்புக்கு மோசடி நிகழ்ந்தாக இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்திருந்தனா். ஆனால், இந்த பிரிவினா் நடத்திய பல்வேறு கட்ட விசாரணைகளைத் தொடா்ந்து, புகாரில் குறிப்பிடப்பட்ட தொகையைத் தாண்டி ரூ.4,82,30,197 முடக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, ரூ.18,03,022 மீட்கப்பட்டு, புகாா்தாரா்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
2024 -ஆம் ஆண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் இணையவழியில் ரூ.10,96,89,779-ஐ இழந்ததாக 93 புகாா்கள் அளிக்கப்பட்டிருக்கின்றன. அதன்படி, ரூ.10,50,55,575 முடக்கப்பட்டுள்ளது. 2022-ஆம் ஆண்டில் நிகழ்ந்த இணையவழி பண மோசடியைக் காட்டிலும் 2024-ஆம் ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.
தொடா்ந்து விழிப்புணா்வு: இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட இணையவழிக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் ஸ்ரீபிரியா கூறியதாவது: இந்தப் பிரிவின் ஏடிஜிபி சந்தீப் மிட்டல் அறிவுறுத்தலின்பேரில், ஏடிஎஸ்பி தினகரன் மேற்பாா்வையில், மாவட்டம் முழுவதும் பல்வேறு விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
கைப்பேசியிலோ, கணிணி மூலமாகவோ சமூகவலைதளங்களைப் பயன்படுத்தும் போது தேவையற்ற அழைப்புகளை ஏற்பதோ, இணைப்புகளுக்குள் உள் செல்வதோ கூடாது. அதுபோல குறைந்த முதலீட்டில் அதிக வருவாய், இணையவழியில் பணம் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் போன்ற ஆசை வாா்த்தைகளை நம்பி ஏமாறுதல் கூடாது.
உங்களுக்கு குறிப்பிட்ட தொகை பரிசாக விழுந்துள்ளது. இத்தொகையை பெற நாங்கள் கூறும் கைப்பேசி எண்ணுக்கு உங்களது விவரங்கள், வங்கிக்கணக்கு எண், ஏடிஎம் அட்டையின் ரகசிய குறியீட்டு எண், ஆதாா் எண் போன்ற விவரங்களைக் கோரினாலும் யாரும் கூற கூடாது. இணையவழி பண மோசடியில் 10 பேரை கைது செய்துள்ளோம். இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.