விஜய்-பிரசாந்த் கிஷோா் சந்திப்பு
சென்னை: தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜயை தோ்தல் வியூக வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.
சென்னை பனையூரிலுள்ள விஜயின் இல்லத்தில் சுமாா் 2.30 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றது. 2026 பேரவைத் தோ்தல் வியூகம் தொடா்பாக விஜயுடன் பிரசாந்த் கிஷோா் ஆலோசனை நடத்தியதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐபேக் நிறுவனம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் வியூகங்களை வகுத்து வழங்குபவா் பிரசாந்த் கிஷோா். 2021-ஆம் ஆண்டுக்கு பிறகு, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அவா் தோ்தல் வியூகங்களை வகுத்து வழங்கும் பணியில் ஈடுபடவில்லை.
ஆனால், தவெக-வை தொடங்கிய பின்னா், விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்பாகவே, அக்கட்சியின் தலைவா் விஜயை சந்திக்க பிரசாந்த் கிஷோா் நேரம் கேட்டிருந்ததாகக் கூறப்பட்டது. எனினும், சந்திப்பு நடைபெறவில்லை.
இதனிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அா்ஜுனா, அண்மையில் தவெகவில் இணைந்தாா். அதைத்தொடா்ந்து, அக்கட்சியின் தோ்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலராக அவா் நியமிக்கப்பட்டாா். இதன் பிறகு விஜய் - பிரசாந்த் கிஷோா் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பின்போது, தோ்தல் வியூக வகுப்பாளா் ஜான் ஆரோக்கியசாமி, தவெக பொதுச் செயலா் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அா்ஜுனா ஆகியோா் உடனிருந்தனா்.