திருவாரூர்: 20 நாட்களில் 2 போலீஸார் தற்கொலை முயற்சி... நீடாமங்கலம் காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது?
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார். போலீஸான இவர் கடந்த ஏழு ஆண்டுகளாகத் திருவாரூர் மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வருகிறார். தற்போது, நீடாமங்கலம் காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறார். இந்நிலையில் குமார், காவல் நிலையத்திற்குள்ளேயே கத்தியால் தனது இடது கையில் பல இடங்களில் கிழித்து தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லப்படுகிறது. ஆய்வாளர் சந்தானமேரி முன்பு இந்த சம்பவம் நடந்ததாகப் பேசப்படுவதால் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
![சிகிச்சையில் தற்கொலைக்கு முயன்ற போலீஸ் குமார்](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/kqoszlji/1c32767c-6e6b-4f00-b1fa-42d23dc103b3.jpg)
தற்போது, குமார் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவரது கைகளில் சுமார் 25 தையல் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் குமாரின் மனைவி மகேஷ்வரி, "ஆய்வாளர் சந்தானமேரி பலர் முன்னிலையில் எனது கணவரை அவமானப்படுத்தியுள்ளார். தெரியாத வேலையைக் கொடுத்துத் தொடர்ந்து சித்திரவதை செய்திருக்கிறார். இதனால் என் கணவர் தற்கொலைக்கு முயன்றார்" என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதே போல் இருபது தினங்களுக்கு முன்பு பெண் தலைமைக் காவலர் சித்ரா, விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதிலும் சந்தானமேரி பெயர் அடிப்பட்டது. இது குறித்து துறை ரீதியிலான விசாரணை நடந்து வருவதாகச் சொல்லப்பட்ட நிலையில் தற்போது குமார் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம், "குமாருக்கு கம்ப்யூட்டர் ஆப்ரேட் செய்யத் தெரியாது. ஆனால் சந்தானமேரி அவரை வழக்குகள் குறித்த விபரங்களை கணினியில் பதிவேற்றச் சொல்லியுள்ளார். தனக்குத் தெரியாது மேடம் எனக் குமார் சொல்லியும் தொடர்ந்து அவருக்கு அந்த பணியை ஒதுக்கியுள்ளார். இதனால் மன உளைச்சலிலிருந்து வந்தார் குமார். இந்த நிலையில் பலர் முன்னிலையில் அவரைச் சந்தானமேரி திட்டி அவமானப்படுத்தியதாகத் தெரிகிறது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/6q6hxips/a20066f6-e4a9-4a5e-991f-0f99908f36d6.jpg)
இதையடுத்து, குமார் கத்தியால் கையில் கிழித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதே போல் தலைமைக் காவலர் சித்ராவும் இருபது தினங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். சொந்தப் பிரச்னையில் தற்கொலைக்கு முயல்வதாக உயர் அதிகாரிகள் இந்த விவகாரங்களைக் கடந்து செல்கின்றனர். உரியக் கவனம் செலுத்தி நீடாமங்கலம் காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது என விசாரணை நடத்த வேண்டும். எந்த காரணமாக இருந்தாலும் மன உளைச்சலில் உள்ள போலீஸாருக்கு உரிய கவுன்சிலிங் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY