`வலித் தெரியாமல் அவன் வாழ்நாள் முடிந்துவிடக் கூடாது!’ - ரயில் கொடூரன் மீது கொதிக்கும் பெண்ணின் கணவர்
இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நொடியிலும் ஏதோவொரு ஒரு மூலையில் பாலியல் அத்துமீறலில் யாரேனும் ஒரு சகோதாரி பாதிக்கப்பட்டுகொண்டிருக்கலாம் என்கிற அச்ச சூழல் உருவாகியிருக்கிறது.
6-2-2025 அன்று காலை 11 மணி... ஜோலார்பேட்டையைக் கடந்து வேலூர் நோக்கி வந்துகொண்டிருந்த இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் 36 வயது கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமைச் செய்ய முயன்று, எதிர்த்துப் போராடிய அந்தப் பெண்ணின் ஒருக் கையையும் உடைத்து, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டிருக்கிறான் ஒரு காமுகன். பெண்களுக்கான பொது பெட்டியில்தான் இத்தனைக் கொடூரமும் நிகழ்ந்தேறியிருக்கிறது. தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் இருந்த 4 மாத கருவின் இதயத் துடிப்பும் திடீரென நின்றுவிட்டது. சிதைந்துபோன கருவையும் அகற்றுவதற்கான மருத்துவ ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், விலகியிருந்த முதுகு தண்டுவடம், முறிவு ஏற்பட்ட கை, காலிலும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருக்கின்றன. தொடர் சிகிச்சைக்குப் பிறகு பெண்ணின் உடல்நிலை சீரான முன்னேற்றத்துடன் இருக்கிறது.
இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையைக் கண்ணீரோடு விவரிக்கும் வீடியோவும் வெளியாகி, நெஞ்சை உறைய செய்தது. `` `என் வயித்துல குழந்தை இருக்கு. உனக்கும் அக்கா, தங்கச்சிங்க இருப்பாங்க. தயவு செஞ்சி என்னை விட்டுடு தம்பி’னு அவன்கிட்ட அரைமணி நேரம் போராடுனேன். எனக்கு நடந்தா மாதிரி வேற எந்த பொண்ணுக்கும் நடக்கக் கூடாது. அந்த சைகோவை வெளிய விடாதீங்க. மக்கள் கொடுக்கச் சொல்லும் தண்டனையைக் கொடுங்க. பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லாமப் போய்டுச்சி’’ என்று நடுக்கம் குறையாமல் பேசியிருந்தார்.
இதையடுத்து, கொடூர இச்சையில் ஈடுபட்ட காமுகனும் கைது செய்யப்பட்டான். வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகிலுள்ள சின்ன நாகல் பகுதியைச் சேர்ந்த 30 வயதே ஆன ஹேமராஜ் என்பவன்தான் அந்த பாலியல் கொடூரன். போலீஸார் துரத்திப் பிடிக்கும்போது கீழே விழுந்ததில் ஹேமராஜிக்கும் இடது கால் முறிந்துபோனது. இவன் மீது கொலை முயற்சி, தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் உட்பட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிறக்காத குழந்தைக்கும் மரணத்தை ஏற்படுத்தியதால், அது கொலைக் குற்றமாக கருதப்பட்டு பிஎன்எஸ் 92-வது பிரிவையும் கூடுதலாக சேர்க்க மருத்துவ அறிக்கைக்காகக் காத்திருக்கிறது போலீஸ். இந்த ஒரு சட்டப்பிரிவுக்கு மட்டும் 10 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கக் கூடும்.
கொடூரன் ஹேமராஜின் பின்னணிக் குறித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் அனைத்துமே அதிர்ச்சி ரகம். இந்த வழக்கோடு சேர்த்து, ஏற்கெனவே கொலை உட்பட பெண்களுக்கெதிரான மூன்று பெருங்குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறான் ஹேமராஜ்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் நம்மிடம் பேசும்போது, ``எனக்குச் சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம். என் மனைவி ஆந்திர மாநிலம் சித்தூர். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலைக்கு வந்தபோது இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். திருப்பூரையே சொந்த ஊராக்கிக் கொண்டோம். எங்களுக்கு 19 வயதில் முதலாமாண்டு கல்லூரிக்குச் செல்லும் மகன் ஒருவனும் இருக்கிறான். இப்போது இரண்டாவது குழந்தை எதிர்பார்க்காமல் உருவானதுதான். மகள் பிறக்க வேண்டும் என்கிற கனவில் ஆசை ஆசையாக இருந்தோம். அந்தக் கொடூரனால் பாதிக்கப்பட்டதில் என் மனைவியே கடைசி ஆளாக இருக்க வேண்டும். இன்னொரு பெண்ணுக்கு இதுபோல் நடக்கவிடக் கூடாது. நிற்க வைத்து சுட்டால் அவன் நிமிடத்தில் செத்தொழிந்துவிடுவான். வலித் தெரியாமல் அவனின் வாழ்நாள் முடிந்துவிடக் கூடாது. பாதிக்கப்பட்ட பெண்களிடமே சாட்டையைக் கொடுத்து அவனின் சதைகள் கிழிய அடிக்கவிட வேண்டும். பெண்கள் பயமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்க இவனே பாடமாக இருக்க வேண்டும்’’ என்றார் கொதிப்புடன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs