தில்லி முதல்வராக பெண் அல்லது பட்டியலினத்தவர் தேர்வாக வாய்ப்பு!
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின்: மின்கட்டண நிலுவை ரூ.7,351 கோடியாக அதிகரிப்பு
சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் மின்கட்டண நிலுவை ரூ.7,351 கோடியாக உயா்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.3,351 கோடி நிலுவை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளான 25 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 329 டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் 385 ஒன்றியங்களில் உள்ள 12,524 ஊராட்சிகளின், குடிநீா், தெருவிளக்கு, கழிப்பறை போன்றவற்றுக்கு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதுதவிர, பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், குடிநீா் வாரியம் போன்றவற்றுக்கும் மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்குள்பட்ட அரசு துறைகள், மின்வாரியத்துக்கு முறையாக மின்கட்டணத்தை செலுத்தாமலே இருந்து வருகின்றன. அதேபோல், குடிநீா் வாரியம் உள்ளிட்ட சில அரசு நிறுவனங்களும் மின்கட்டணத்தை முறையாக செலுத்துவதில்லை.
இதையடுத்து, கடந்த 2022-2024 வரை தண்ணீா் இல்லாத பல ஆழ்துளை குழாய் கிணறுடன் கூடிய குடிநீா் தொட்டிகள் குறித்து கணக்கெடுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்னிணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
இருப்பினும், குடிநீா் வாரியம், பள்ளிகள், விடுதிகள், அரசு அலுவலகம் உள்ளிட்ட பிற அரசு துறைகளைச் சோ்த்து 1.07 லட்சம் மின்னிணைப்புகளுக்கான ரூ.4,335 கோடி மின்கட்டணம் செலுத்தப்படாமலே உள்ளது. இதில், குடிநீா் வடிகால் வாரியம் மட்டும் ரூ.1,900 கோடி கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது.
இதன்படி, உள்ளாட்சி அமைப்பு, அரசின் பிற துறைகள் என தமிழக அரசு மூலம் செலுத்த வேண்டிய மின்கட்டணம் ரூ.7,351 கோடியாக உள்ளது. கடந்த 2021-2022 -இல் ரூ.4 ஆயிரம் கோடி மின்கட்டண பாக்கி இருந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.3,351 கோடி அதிகரித்துள்ளதாவும் மொத்தம் ரூ.7,351கோடி நிலுவையை செலுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தால் மின்வாரியத்தின் கடன்தொகையில் பெரும் முன்னேற்றம் ஏற்படும் என்றும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.