சா்வதேச போட்டிகளில் வென்ற வீரா்களுக்கு ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்
இரு சா்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா்களுக்கு தலா ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகையை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை (பிப்.10) நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, ஊக்கத் தொகைகளை அவா் அளித்தாா்.
மலேசியாவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு தமிழ்நாட்டு வீராங்கனை கு.கமலினி துணை புரிந்தாா். இதேபோன்று, உலகக் கோப்பை கோ-கோ போட்டியில் வென்ற இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சோ்ந்த வீரா் வி.சுப்பிரமணி இடம் பெற்றிருந்தாா்.
சா்வதேச அளவிலான இரு போட்டிகளிலும் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற கமலினி, சுப்பிரமணி ஆகியோருக்கு தலா ரூ. 25 லட்சம் உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா்.
அதன்படி, தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஊக்கத் தொகைக்கான காசோலைகளை இருவருக்கும் முதல்வா் வழங்கினாா்.
இந்த நிகழ்வின்போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலா் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி ஆகியோா் உடனிருந்தனா்.