ஜம்மு-காஷ்மீருக்குப் பயமின்றி வருகை தரலாம்: பொதுமக்களுக்கு மத்திய அமைச்சர் வேண்ட...
வளரும் குழந்தையுடன் வளர வேண்டிய பெற்றோர்... பறந்து போ - திரை விமர்சனம்!
இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான பறந்து போ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சென்னையிலுள்ள அப்பார்ட்மெண்ட் ஒன்றில் படத்தின் நாயகன் குழந்தை அன்பு அறிமுகமாகிறான். சேட்டைகள் செய்து, வீட்டையே இரண்டாக்கி, என்னென்மோ செய்து தன் தனிமையை விரட்டுகிறான். பெற்றோர் வேலைக்குச் செல்வதால், அன்புவைத் தனியாக விட்டுச் செல்கின்றனர். இப்படியான சூழலில், தன் தந்தையான சிவாவிடம் அடம்பிடித்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என அன்பு அடம்பிக்கிறான். இருவரும் ஒரு பயணத்தை மேற்கொள்கின்றனர். அதில், என்னென்ன சம்பவங்கள், மனமாற்றங்கள் நிகழ்கிறது என்பதே பறந்து போ.
இயக்குநர் ராம் மீண்டும் நல்ல திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார். கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி என காலத்திற்கேற்ப நாம் சந்திக்கும் சமூக சிக்கல்களைப் பேசிய ராம், பறந்து போ படத்திலும் இன்றைய குழந்தை வளர்ப்பு குறித்தும் நாம் சரியாகத்தான் நம் குழந்தைகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோமா என்பதையும் துளி முகச்சுழிப்பும் இல்லாமல் அழகான வசனங்களால், வெடித்துச் சிரிக்கும் நகைச்சுவைகளால் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
எல்லா அப்பாக்களும் பொய்யர்கள், வாத்து யானை மாதிரி இருந்தால் அது டைனோசர் என படம் முழுக்க ஒரு புன்சிரிப்புடனே காட்சிகளைக் காணமுடிகிறது. தந்தைக்கும் மகனுக்குமான பயணத்தில் படத்தைப் பார்க்கும் பெற்றோர்கள் நிறைய இடங்களில் தங்களுக்கும் தங்கள் குழந்தைகளுக்குமான இடைவெளிகளை அறிய முடியும்.
கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுப்பதாலேயோ அல்லது முன்னதாகவே கொடுப்பதாலேயே நாம் நல்ல பெற்றோர் என சொல்லிவிட முடியுமா? உண்மையில் குழந்தைகள் உலகில் பொய் இல்லை, முகஸ்துதிகள் இல்லை, நேர்மையாக வாழும்போது சிக்கல்களைச் சந்திக்க வேண்டும் என்பதுபோல்தான் குழந்தைகளின் அக உலகம்.
அந்த உலகிற்குள் நுழைய முதலில் நாமும் சில வேடங்களைக் களைந்து, நேர்மையாக சிலவற்றை பேசவும் கற்றுக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும் இல்லையா? இந்தப் படம் முழுக்க அப்படியான தருணங்கள் அழகாக பூத்து வருகிறது.
சிவாவுக்கும் அஞ்சலிக்குமான காட்சிகள் சூரியகாந்தி பூ போல் பார்க்க பார்க்க கொள்ளை அழகு. பால்யகால நண்பனை அடையாளம் கண்டுகொள்வதிலிருந்து வேறு வேறு குழந்தைகளின் பெற்றோர்களான இருவருக்குமான உரையாடல் ரசிக்க வைக்கிறது. குளத்தில் பாவடை அணிந்து அஞ்சலி குளிக்கும்போது சிவா அருகில் அமர்கிறார். இரு நண்பர்களுக்கான உரையாடலில் அஞ்சலி மீது கிளாமர் எண்ணம் வருவதில்லை. அழகான ராம் டச்!
வெறும் குழந்தை வளர்ப்பை மீறி நாம் அன்றாடம் காணும் மனிதர்களைப் பற்றி மிக அழகாகவும் நேர்மையாகவும் ராம் எழுதியிருக்கிறார். எல்லாரும் நல்லவர்கள் என்றில்லாமல் அவர்கள் தவறு செய்யும் தருணங்களைச் சுட்டிக்காட்டி அவர்களையே அவர்களுக்கு அடையாளம் காட்டும் கதாபாத்திரங்களை வடிவமைத்தது பாராட்டுக்குரியது.
ஆனால், மகன் செய்யும் அத்தனை குறும்புகளையும், அட்டகாசங்களையும் ஒரு தந்தை மன்னித்துக்கொண்டே இருப்பாரா என்கிற விஷயம் மட்டும் கொஞ்சம் அன்னியமாகத் தெரிந்தது. படத்தில் முதல் காட்சியில் மகனை அடிப்பதுடன் சரி, அதற்குப் பின் கண்டிப்புகள் இல்லாமல் போனது லாஜிக் பிரச்னைகளைக் கொடுக்கிறது.
நடிகர் சிவாவுக்கு நல்ல கதாபாத்திரம். அவரது இயல்பான உடல்மொழியும் நடிப்பும் இக்கதைக்கு பிரமாதமாகப் பொருந்தியிருக்கிறது. மரத்தின் மேலே இருந்தபடி அவர் பேசும் வசனங்களில் திரையரங்கமே சிரித்து கைதட்டி கொண்டாடுகிறது. அதேபோல், அம்மாவாக நடித்த மலையாள நடிகையான கிரேஸ் ஆண்டனி அட்டகாசம். இரண்டாம் பாதியில் நிறைய நல்ல காட்சிகளால் கவனம் ஈர்க்கிறார். தமிழுக்கு நல்ல வரவு.

இப்படத்தின் நாயகன் அன்பு கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் மிதுல் ரியன் நடிப்பில் கலக்கியிருக்கிறார். குழந்தைத்தனத்துக்கு உண்டான அனைத்து உடல்மொழிகளையும் ராம் அச்சிறுவனிடமிருந்து வாங்கிவிட்டார். தன் அப்பா புகைப்பழக்கத்தைவிட வேண்டும் என்பதற்காக அவன் மேற்கொள்ளும் விஷயங்கள் நன்றாக ரசிக்க வைக்கின்றன. அன்புவின் கதாபாத்திர வளர்ச்சிக்காக சந்தோஷ் தயாநிதியின் சில பாடல்கள் பின்னணியில் ஒலிக்கப்படுவதும் அருமை.
இதையும் படிக்க: சொந்த வீடு கனவா? சுமையா? 3 பிஎச்கே - திரை விமர்சனம்!
பறந்து போ படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் இந்தாண்டில் வெளிவந்த மிகச்சிறந்த தமிழ்ப்படம். கமர்சியலாகவும் கதையாகவும் ரசிகர்களை ஏமாற்றாத திரைப்படம். இயக்குநர் ராமின் திரைப்பயணத்தில் பறந்து போ தனித்துவமானது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்.