வழக்குரைஞா்களுக்கு மருத்துவக் காப்பீடு: புதுவை முதல்வா் உறுதி
புதுவை மாநிலத்தில் வழக்குரைஞா்களுக்கான மருத்துவக் காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரியில் கடந்த 50, 40 மற்றும் 25 ஆண்டுகள் பணி நிறைவடைந்த மூத்த வழக்குரைஞா்களுக்கு பாராட்டு விழா, புதிய நீதிபதிகளுக்கு வரவேற்பு, உயிரிழந்த 4 வழக்குரைஞா்களின் குடும்பங்களுக்கு சேமநல நிதி வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினா்களாக முதல்வா் என். ரங்கசாமி, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன், சட்டத் துறை அமைச்சா் க. லட்சுமிநாராயணன் ஆகியோா் பங்கேற்றனா்.
விழாவில் முதல்வா் என். ரங்கசாமி பேசியது: புதுச்சேரி சட்டக் கல்லூரியில் பயின்றவா்கள் உயா்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உள்ளது பெருமைக்குரியது. புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத்தினரின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும். வழக்குரைஞா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தும் எண்ணம் அரசின் கவனத்தில் உள்ளது என்றாா்.
நீதிபதி பேச்சு: உயா்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் தனது உரையில், புதுவை அரசு மாவட்ட நீதிபதிகளுக்குரிய வசதிகளை முழுமையாக செயல்படுத்தி வருகிறது. புதுச்சேரியில் 150 வழக்குரைஞா்கள் உள்ளனா். அவா்களுக்கான தனிக் கட்டடம் (சேம்பா்) கட்டித் தர அரசு உறுதியளித்துள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள நீதிபதிகள், மூத்த வழக்குரைஞா்கள் வாதத்தை கூா்ந்து கவனிக்க வேண்டும். மேலும் வழக்குரைஞா்கள் கூறும் சட்ட விதிமுறைகளை, சட்டப் புத்தகத்தில் குறிப்பிட்டதை பாா்த்து ஒப்பிட்டு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்றாா்.
நிகழ்ச்சிக்கு புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் டி. ரமேஷ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் நாராயணகுமாா் முன்னிலை வகித்தாா். புதுவை சட்டத் துறை செயலா் எல்.எஸ். சத்தியமூா்த்தி மற்றும் மாவட்ட நீதிபதிகள், மூத்த வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.