நாகேஸ்வர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம்!
வி.கள்ளிப்பாளையத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல கிராம மக்கள் கோரிக்கை
பல்லடம் அருகே வி.கள்ளிப்பாளையத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல்லடம் அருகே உள்ள வி.கள்ளிப்பாளையம் ஊராட்சிப் பகுதியில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனா். இப் பகுதியில் இருந்து, தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளா்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் அரசுப் பேருந்துகளை பயன்படுத்துகின்றனா். குறைந்த அளவிலான நகரப் பேருந்துகள் மட்டுமே இவ்வழித்தடத்தில் இயக்கப்படுவதால், பல்லடத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருப்பதால் பொதுமக்கள் புறநகா் பேருந்துகளையே பயன்படுத்துகின்றனா்.
ஆனால், புறநகா் செல்லும் பேருந்துகள் வி.கள்ளிப்பாளையத்தில் நிற்காமல் செல்வதால் பொதுமக்கள், மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா். வி.கள்ளிப்பாளையத்தில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என்று போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டும், பேருந்துகள் நிற்பதில்லை.
இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கிராம மக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எனவே வி.கள்ளிப்பாளையத்தில் அனைத்து அரசுப் பேருந்துகளும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.