செய்திகள் :

Mahindra Zeo EV: வணிகர்களுக்குக் கைகொடுக்கும் மஹிந்திரா ஜியோ ev - என்ன ஸ்பெஷல்?

post image

வாகனத் துறையில் மின்சார வாகனங்களின்  வருகை ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

வணிக நோக்கங்களுக்காக வடிவமைக்கப்பட்ட மின்சார வாகனங்கள் பல இருந்தாலும், மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி (Mahindra Last Mile Mobility) நிறுவனம் புதிய மஹிந்திரா ஜியோ இ.வி (Mahindra Zeo EV) நான்கு சக்கர பிக்கப் வாகனத்தை அறிமுகம் செய்து, ஒரு படி மேலே சென்றுள்ளது.

வணிக நிறுவனங்களுக்குத் தேவையான சக்தி, செயல்திறன் (Performance), பாதுகாப்பு (Safety), வசதி (Comfort) மற்றும் குறைந்த செலவு (Cost-Effectiveness) ஆகியவற்றை ஒருங்கே வழங்கி, வணிகத்தை சுற்றுச்சூழல் அக்கரையோடு செய்ய உதவுகிறது.  சென்னையில் இந்த புதிய பிக்கப் வாகனத்தை ஓட்டிப் பார்த்ததில், மஹிந்திரா ஜியோவைப் பற்றி முழுதாக புரிந்து கொள்ள முடிந்தது.

வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு தரம்


முன்பக்க தோற்றத்திலும் பக்கவாட்டுத் தோற்றத்திலும் மஹிந்திரா ஜியோ.ev மஹிந்திரா ஜீட்டோவை போலவே இருக்கிறது. இது நகர்ப்புறம் மற்றும் கரடுமுரடான சாலைகளிலும் ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நெரிசலான நகரச் சாலைகளாக இருந்தாலும் சரி, குறுகலான கிராமப்புற பாதைகளாக இருந்தாலும் சரி, ஜியோவின் திறன் மற்றும் நம்பகத்தன்மை வணிகர்களுக்கு பெரிதும் உதவுகிறது. இதன் உறுதியான கட்டமைப்பே இவற்றுக்கான ஆதரம்.

ஓட்டுநர்களுக்கு அதிகப்படியான வசதி

இது போன்ற வணிக வாகனங்களை ஓட்டுகிறவர்களின் ஒரு நாளின் பெரும்பகுதி வாகனங்களிலேயே கழிந்துவிடுகிறது. இதை மனதில் வைத்து இந்த வாகனத்தை வடிவமைத்திருக்கிறார்கள். ஆம். விசாலமான கேபின் (Cabin), கால்களை நீட்ட தாராளமான இடம் இருக்கிறது.

ஹெட் ரூமுக்கும் பஞ்சமில்லை. மேலும், சோர்வு இல்லாமல் ஓட்டுவதற்கு ஏற்ற இருக்கைகள் (Ergonomic seating design) மற்றும் 4.3 மீட்டர் திருப்பு ஆரம் (Turning radius), குறுகிய நகர சாலைகளில் எளிதாக வளைந்து செல்ல உதவுகிறது.

ஓட்டுவதை எளிதாக்கும் வகையில், மஹிந்திரா ஸ்மார்ட் கியர் ஷிஃப்டர் (Smart gear shifter) மற்றும் இரண்டு ஓட்டுநர் முறைகளை (இரண்டு டிரைவிங் மோட்ஸ் - Power & Economy) ஒருங்கிணைத்துள்ளது. இதில் பவர் மோட் வேகமாகவும், எகானமி மோட் அதிக மைலேஜ் தரும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.  தண்ணீர் பாட்டில்களை வைப்பதற்கான இடவசதி குறைவாக இருப்பது ஒரு குறை.

சக்திவாய்ந்த செயல்திறன்

மஹிந்திரா ஜியோவுக்கு 30 kW  சக்தியை அளிக்கும் மோட்டார் (Permanent Magnet Synchronous - PMS) கொடுத்திருக்கிறார்கள். இது 114 Nm உச்ச முறுக்குவிசையை (Peak torque) வழங்குகிறது. இதில் எக்கோ (Eco) மற்றும் பவர் (Power) என இரண்டு டிரைவிங் மோட்ஸ் உள்ளன.  

இருக்கும் சக்தியை கொண்டு அதிக தூரம் பயணிக்க வேண்டும் என்றால் எக்கோ மோடையும், கூடுதல் சக்தி தேவைப்படும்போது பவர் மோடையும் பயன்படுத்தலாம். வண்டி முழுக்க சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்லும்போதும் நிலையான டார்க் (Consistent torque) வெளிப்படுவதால்,   எந்த விதமான சாலைகளாக இருந்தாலும் அதை சமாளிக்க முடிகிறது.

இதன் 2500 மிமீ வீல்பேஸ் (Wheelbase) மற்றும் 180 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் (Ground clearance)  ஆகியவையும் இதற்கு உதவுகிறது. முன்புறத்தில் மெக்பெர்சன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷன் (McPherson Strut suspension) மற்றும் பின்புறத்தில் செமி-ட்ரைலிங் ஆர்ம் சஸ்பென்ஷன் (Semi-trailing arm suspension)  கொடுத்திருக்கிறார்கள். பிரேக் பொறுத்தவரை, முன்புறத்தில் டிஸ்க் பிரேக் (Disc brake) மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் (Drum brake) உள்ளது.

பேட்டரி மற்றும் தூரம்

தடையற்ற பயன்பாட்டுக்கு அதிக திறன் கொண்ட பேட்டரி அவசியம். மஹிந்திரா ஜியோவில் இரண்டு பேட்டரி ஆப்ஷன்ஸ் உள்ளன: 21.3 kWh பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 160 கிமீ தூரம் வரை செல்லும். 18.4 kWh பேட்டரி நகர்ப்புற பயன்பாட்டிற்கு ஏற்றது. ஜியோவில் இருக்கும் ஆற்றல் மீளுருவாக்கம் அமைப்பு (Energy regeneration system), பிரேக்கிங் அல்லது வேகத்தைக் குறைக்கும்போது 20% வரை ஆற்றலை மீட்டெடுக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மஹிந்திரா ஜியோவில் நவீன பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. இது பாதுகாப்பில் AIS038 தரநிலையை கொண்டது. மேலும், ஹில்-ஹோல்டு அசிஸ்ட் (Hill-Hold Assist) சரிவுகளில் பின்னோக்கி உருள்வதைத் தடுக்கிறது. ஃபார்வர்டு கொலிஷன் வார்னிங் (Forward collision warnings) மற்றும் லேன் டிபார்ச்சர் அசிஸ்டென்ஸ் (Lane departure assistance) போன்ற ADAS (Advanced Driver Assistance Systems) அம்சங்கள் விபத்துக்ளை தவிர்க்க உதவுகிறது. IP67 தரமதிப்பீடு (IP67-rated e-kit) தூசி மற்றும் நீர் உட்புகாத வகையில் பாதுகாக்கிறது.

சரக்கு கொள்ளளவு

வணிக வாகனத்தின் முக்கிய செயல்பாடு சரக்குகளை திறமையாக கொண்டு செல்வதுதான். மஹிந்திரா ஜியோ 765 கிலோ பேலோட் திறன் (Payload capacity) மற்றும் 200 கன அடி DV பெட்டியுடன் (200 cft DV box) வருகிறது. இதன் 7.4 அடி சரக்கு பெட்டி அழுகும் பொருட்கள் முதல் தொழில்துறை பொருட்கள் வரை அனைத்தையும் கொண்டு செல்ல ஏற்றதாக உள்ளது.

ஃப்ளீட் மேனேஜ்மென்ட் சிஸ்டம்

மஹிந்திராவின் நெமோ யுனிவர்ஸ் (NEMO Universe) ஸ்மார்ட் டிராக்கிங் (Smart tracking) மற்றும் நிகழ்நேர எச்சரிக்கை (Real-time alerts) மூலம் ஃப்ளீட் மேனேஜ்மென்டை மேம்படுத்துகிறது. இதன் மூலம் வாகனங்களின் பயன்பாட்டை கண்காணிக்கவும், செலவுகளை குறைக்கவும் முடியும்.

சார்ஜிங் விருப்பங்கள்

மின்சார வாகனங்களில் சார்ஜிங் நேரம் ஒரு கவலையாக இருக்கலாம்.  அவை கூடாது என்பதை மனதில் கொண்டு, இதை டிசி ஃபாஸ்ட் சார்ஜர் (DC Fast Charging) மூலம் 71 நிமிடங்களில் 0-80% வரை சார்ஜ் செய்யலாம். 3.3 kW ஏசி ஹோம் சார்ஜர் (AC home charging) என்றால், 7 மணி 10 நிமிடங்களில் 0-100% வரை சார்ஜ் செய்யலாம். 6.6 kW ஏசி ஃபாஸ்ட் சார்ஜிங் (AC fast charging) மூலம் 3 மணி 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யலாம்.

குறைந்த செலவு

மஹிந்திரா ஜியோ வி1 எஃப்எஸ்டி வேரியண்டின் (V1 FSD variant) விலை ரூ.7.52 லட்சம் (சென்னை எக்ஸ்-ஷோரூம்) மற்றும் டாப்-எண்ட் வி2 டிவி வேரியண்டின் (V2 DV variant) விலை ரூ.7.99 லட்சம். இதன் குறைந்த எரிபொருள் செலவு மற்றும் குறைவான பராமரிப்புச் செலவுகள் வணிக நிறுவனங்களுக்கு கணிசமான சேமிப்பை அளிக்கும்.

மோட்டார் விகடன் தீர்ப்பு

மஹிந்திரா ஜியோ எலக்ட்ரிக் பிக்கப்  சுற்றுச்சூழல் ஏற்ற  வாகனம் மட்டுமல்ல, இது வணிக உலகில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டதாக இருக்கிறது. சக்திவாய்ந்த மோட்டார், சிறந்த பேட்டரி தூரம், வலிமையான கட்டமைப்பு, ஸ்மார்ட் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன், ஜியோ வணிக மின்சார வாகனங்களுக்கு என்று ஒரு அளவுகோளை அமைக்கிறது.

குறைந்த விலையில் அதிக உற்பத்தித் திறனை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஜியோ, நிலையான மற்றும் திறமையான  கமர்ஷியல் வாகனத்தை தேடுகிறவர்களுக்கான ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

Sensor Issue Explained: அதிக Sensor இருக்குற Car Accident ஆனா Start ஆகாதா? | TheDriveSeatGuy & MV

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |80களில் தூத்துக்குடிய... மேலும் பார்க்க

Mahindra: BE.06, XUV.e9 Electric கார்கள் எப்படித் தயாரிக்கப்படுகிறது? Inside Factory Tech Explained

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 | Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |80களில் தூத்துக்குடிய... மேலும் பார்க்க